குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பவித்ரா லக்ஷ்மி. இந்த நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா உடன் இணைந்து அடித்த லூட்டி ஏராளம். அவை சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகவும் பகிரப்பட்டன.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அபாரமான சமையல் திறமையால் இறுதி சுற்று வரை முன்னேறினார் பவித்ரா லக்ஷ்மி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான 'நாய் சேகர்' படத்தில் அவரின் ஹீரோயினாக அறிமுகமானார் பவித்ரா லக்ஷ்மி.  அதனை தொடர்ந்து மலையாளத்தில் திருஷ்யம், உல்லாசம், யூகி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோவிலும் பவித்ரா கலந்து கொண்டுள்ளார்.    


 



அம்மாவை இழந்த பவித்ரா:


வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பவித்ரா லக்ஷ்மியின் அம்மா கடந்த வாரம் காலமானார். அவரின் மறைவு குறித்து சோகமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார் பவித்ரா. ”7 நாட்கள் முடிந்துவிட்டது. இருப்பினும் அதை நான் எனது புத்திக்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் என்னை விட்டு பிரிந்து ஒரு வார காலம் முடிந்துவிட்டது. ஏன் என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. ஐந்து வருடங்களாக நீங்கள் அனுபவித்த வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என நினைத்து நான் என்னை ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்.


நீங்கள் என்றுமே சூப்பர் அம்மா மட்டுமின்றி சூப்பர் பெண். ஒரு தனி பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நீங்கள் அதை அனைத்து வழிகளிலும் சிறப்பாக செய்தீர்கள். ஒருமுறை உங்களுடன் பேசவும், உங்கள் உணவை சாப்பிடவும் ஆசை படுகிறேன். ஆனால் நீங்கள் என்னை தனியே விட்டுவிட்டீர்கள். நீங்கள் என்றுமே என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த துயரமான நேரத்தில் என்னுடைய குடும்பமாக என் அருகில் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்து இருப்பேன் என எனக்கு தெரியவில்லை. மேலும் ஆதி, அம்மாவின் கடைசி நாட்களில் நீ தான் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர்.  எனக்கு அடுத்து வேறு யாரை விடவும் அவர் உன்னையே தேர்ந்து எடுத்தார். விக்னேஷ் குமாருக்கும் நன்றிகள். என் அம்மாவுக்கு மகன் இல்லை என்ற குறையை தீர்த்ததற்காக நன்றிகள். அம்மா எப்போது உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார். உங்களின் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பாததற்கு வருந்துகிறேன். என்னால் முழுமையாக இந்த துயரத்தில் இருந்து கடந்து வர முயற்சிக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன்” என பவித்ரா ஒரு சோகமான பதிவை போஸ்ட் செய்து இருந்தார். அவரின் ரசிகர்கள் கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.