சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜவகர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 44வது திரைப்படத்துக்கான நடிகர்கள் பெயரைத் தற்போது சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் இணைந்துள்ளனர்.படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 










முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’  திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அவரது 43வது திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகனன்’ நடித்து வருகிறார். இந்த படத்தில்  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் 43 படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று படத்தின் நாயகன் தனுஷின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷ்43 படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிட இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது படக்குழு. இந்நிலையில் அண்மையில் தனுஷ் 43 படத்தின் போஸ்டர் வெளியானது. படத்திற்கு 'மாறன்’ என பெயர் வைத்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள தனுஷின் 43 வது படமான ’மாறன்’ டைட்டில் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றன.


’மாறன்’  படமானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் படத்தின் நாயகி மாளவிகாவுடன் கூடிய இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியானது. ஆனால் அது அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் படத்திலிருந்து இயக்குநர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாகவும், ‘மாறன்’ படத்தை  தனுஷே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷிடம் கார்த்திக் நரேன் சீன் குறித்து விளக்குவது போன்ற புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு “ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “ என கேப்ஷன்  கொடுத்திருந்தது.