ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூர்-இஸ்லாம் சனயேவை தோற்கடித்து முன்னேற்றம். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்துள்ளார் ரவிக்குமார். இதன்மூலம் இந்தியாவுக்கான நான்காவது பதக்கத்தை உறுதிசெய்துள்ளார் ரவிக்குமார். நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இது இந்தியாவுக்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கம், மல்யுத்தவீரர் சுஷீல் குமார்  வரிசையில் இந்தியாவுக்கான மூன்றாவது ஒலிம்பிக் மல்யுத்த பதக்கத்தையும் இதன்மூலம் உறுதி செய்துள்ளார் ரவிக்குமார். 






 


யார் இந்த ரவிக்குமார் ?

மல்யுத்தத்துக்குப் பெயர் போன ஹரியானாவில் நாஹ்ரி கிராமத்தில் பிறந்தவர் ரவிக்குமார். 23 மூன்று வயதான ரவிக்குமார் தனது 10வது வயதிலிருந்து மல்யுத்தத்துக்குப் பயிற்சி எடுத்துவருகிறார். இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷீல்குமாருக்கு பயிற்சிகொடுத்த குரு சத்பால்சிங்கின் பயிற்சிப்பட்டறையில் இருந்து உருவானவர் ரவிக்குமார். ரவிக்குமாரின் அப்பா ராகேஷ்குமார் தாஹியா நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்துவந்தவர். டெல்லியின் சத்ரசால் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுக்கும் ரவிக்குமாருக்கு தினமும் நாஹ்ரியிலிருந்து சென்று பாலும் பாதாம் பருப்புகளும் கொடுத்துவிட்டு வருவாராம் ரவிக்குமாரின் அப்பா. பல வருடங்களாகப் பயிற்சி எடுத்துவரும் ரவிக்குமாரின் டயட் இதுதான். 


2015ம் ஆண்டு சால்வடார் டி பாஹியாவில் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் தாஹியா/  2017ம் ஆண்டு உடலில் காயம் ஏற்பட்டதை அடுத்து ஒருவருடத்துக்கும் மேலாக விளையாடாமல் இருந்தார்.  மீண்டும் பயிற்சிக் களத்துக்கு வந்த தாஹியா 2018ம் ஆண்டு புகாரெஸ்டில் நடந்த 23 வயதினருக்குக் கீழான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவின் மல்யுத்த புரோஃபஷனல் லீக் போட்டிகளில் 57 கிலோ எடைப்பிரிவில் ஹரியானா ஹேம்மர்ஸ் சார்பாகப் பங்கேற்ற தாஹியா இறுதிவரை அசைக்கமுடியாதவராகக் களத்தில் நின்றார். 


2019ம் ஆண்டு முதன்முதலாக உலகசாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற தாஹியா ஐரோப்பிய சாம்பியன் அர்சென் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன் யுகி தகாஹாஷி ஆகியோரைத் தோற்கடித்தத்தன் வழியாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்குத் தேர்வானார். அந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் தாஹியா அடுத்தடுத்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒலிம்பிக்கில் இறுதிக்கு முன்னேறியது எப்படி? 


கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாமுக்கு எதிராக ஒருகட்டத்தில் 9-2 எனப் பின் தங்கியிருந்த தாஹியா கடைசி இரண்டு நிமிடத்தில் நூரைத் தரையோடு அழுத்தி இறுதிப்போட்டிக்கான தனது இடத்தை உறுதிசெய்தார்.  இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் உகுவேவை எதிர்கொள்கிறார். மேஜிக் நிகழுமா? நாளை மாலை 4:10 மணிக்கு நிகழும் இறுதிப்போட்டியில் தெரியவரும்.