பிரபல டோலிவுட் இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி திரைப்படம் தேவரா பாகம் 1(Devara Part-1).


பிரபல பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இப்படத்தின் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலி கான் இப்படத்தில் வில்லனாகக் களமிறங்குகிறார். தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்பட பான் இந்திய படமாக இப்படம் உருவாகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


கடலை மையப்படுத்தி அமைந்திருக்கும் இந்த க்ளிம்ஸ் வீடியோவில் சரக்கு பெட்டிகளை எடுத்து செல்பவர்களுடன் ஜூனியர் என்.டி.ஆர் சண்டையிடும் காட்சிகள் அமைந்து அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் “இந்தக் கடலில் மீனை விட அதிகமா கத்தியும் ரத்தமும் கொட்டிக் கிடக்கு.. அதனால் தான் இதுக்கு பேர் செங்கடல்” எனும் வசனமும் அமைந்துள்ளது.


 



அனிருத்தின் இசையும் ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் இப்படத்தின் வரவை எதிர்நோக்கி ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.