ஸ்லம் டாக் மில்லியனர் ஹீரோ


2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக,  பிரபல நடிகர் அனில் கபூருடன் இணைந்து நடித்தவர் தேவ் பட்டேல். இவர், இப்படத்தைத் தொடர்ந்து, ஹோட்டல் மும்பை, தி கிரீன் நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களுக்காக சில விருதுகளையும் வென்றுள்ளார். அது மட்டுமின்றி, லையன், சேப்பி உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர், பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர். படிப்பு, பிறப்பு எல்லாமே வெளிநாட்டில் தான் என்றாலும் அவ்வப்போது ஹிந்தி படங்களில் தலைகாட்டி வருகிறார் தேவ் பட்டேல். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 


‘ரியல்’ ஹீரோவாக மாறிய ‘ரீல்’ ஹீரோ!


ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு என்ற இடத்தில் தேவ் பட்டேல், தனது நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த இருவர் திடீரென சண்டையிட ஆரம்பித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல், சண்டை முற்றி இருவரும் இரண்டு பேரும் திடீரென்று மாறி மாறி தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த சண்டையில் ஈடுபட்டிருந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து எதிராளியின் நெஞ்சில் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த தேவ் பட்டேல்,  உடனே சுதாரித்துக் கொண்டு தனது நண்பர்கள் உதவியுடன் சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளார்.


கத்தி சண்டையை தடுத்த தேவ்:


இந்த சம்பவம் குறித்து தேவ் பட்டேல் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், அடிலெய்டு பகுதியில் உள்ள ஒரு ‘கன்வீனியன்ஸ்’ ஸ்டோரின் முன்பு இருவர் சண்டையிட்டு கொண்டிருந்ததாகவும், சண்டையின் போது இருவரும் திடீரென வன்முறையை செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை நேரில் பார்த்த தேவ் பட்டேலும் அவரது நண்பர்களும் சண்டையை தடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  


32 வயது நபர் காயம்!


இந்த கத்தி சண்டை குறித்து தகவல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய போலிசார்,  அடிலெய்டு பகுதியில் இருவர் சண்டையிட்டு வருவதாக 8.45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும்,  இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கத்தி குத்தால் காயம் அடைந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளனர். கத்தி குத்து வாங்கிய நபருக்கு சுமார் 32 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.  மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த  நபரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தேவ் பட்டேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தின் போது கத்தியால் தாக்கிய பெண்ணின் நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.


Also Read|முப்பது வருட தன்னம்பிக்கை நீங்கள்..’ உருகி உருகி ட்வீட் செய்த அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!


ஊடகத்தின் கவனம் மகிழ்ச்சியளிக்கிறது..


கத்தி சண்டையை நிறுத்திய தேவ் பட்டேலிற்கு நல்ல வேளையாக எந்த அடியும் ஏற்படவில்லை. அவரது இந்த செயலை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேவ் பட்டேலின் தரப்பிலிருந்து, இந்த சூழ்நிலையில் ஹீரோக்கள் யாரும் இல்லை எனவும், தேவ் தனது உள்ளுனர்வின் படி செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகையான செயல்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகம் இவ்வளவு கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக கூறப்பட்டுள்ளது. 


‘டேக்வாண்டோ’ எனப்படும் கொரியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிர்ச்சியை, நடிகர்தேவ் பட்டேல் 10 வயதிலிருந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.