கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளதால், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கரூர் காவிரி கரையோரம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதிக்கு நேரில் சென்ற கலெக்டர் பிரபுசங்கர், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எஸ்பி சுந்தரவதனம் உடன் இருந்தார்.
பின்னர் கலெக்டர் மாயனூர் கதவனை செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரி கரை ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து காலை காணொளி காட்சி மூலமாக கலெக்டருடன் முதல்வர் பேசி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் மக்களை பாதுகாத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் 26 கிராம மக்கள் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கின்றன. 26 கிராமங்களிலும் ஒவ்வொரு கிராமத்திலும், வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத வகையில் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தவிட்டுப்பாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை, அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த பாதுகாப்பு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையிலிருந்து இப்போது 1.60 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளதால், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் கரையோர பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்