தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. கோப்ரா படம் தோல்விக்கு பிறகு, அஜய் ஞானமுத்து தனக்கு அடையாளம் தந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதியே இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிமான்டி காலனி 2ம் பாகத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
டிமான்டி காலனி 2:
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு ட்ரெயிலர் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படத்தை பாபி பாலச்சந்திரன், விஜயசுப்பிரமணியன், ஆர்.சி. ராஜ்குமார் தயாரிக்கின்றனர். முதல் பாகத்தில் சென்னையில் உள்ள டிமான்டி காலனியை வைத்து எழுதப்பட்ட வலுவான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகளும், திகில் காட்சிகளும் ரசிகர்களை தியேட்டரில் ரிபீட் மோடில் படம் பார்க்க வைத்தது. அந்த படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். 2015ம் ஆண்டு வெளியான இந்த படம் அருள்நிதி கேரியரில் மறக்க முடியாத வெற்றியை தந்தது. டிமான்டி கதாபாத்திரத்தில் ஆன்டி ஜாஸ்கேலைனேன் நடித்திருந்தார்.
ரசிகர்கள் ஆர்வம்:
தற்போது உருவாகி வரும் டிமான்டி காலனி 2ம் படத்தில் அருள்நிதியுடன் மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், சர்ஜனா காலித் ஆகியோர் நடித்துள்ளனர். கோப்ரா படம் அஜய் ஞானமுத்துவிற்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனக்கு அடையாளம் தந்த டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுக்க அவர் முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து, நாளை மறுநாள் டிமான்டி காலனி 2ம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.