2015ஆம் ஆண்டு வெளியாகி நடிகர் அருள்நிதியின் கரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது டிமான்டி காலனி திரைப்படம். சிரிப்பும் ஹாரரும் கலந்து திகிலூட்டிய டிமான்டி காலனி திரைப்படம் கோலிவுட்டின் தரமான பேய் படங்களின் வரிசையில் ஒன்றாக அமைந்தது.
வெளியான ட்ரெய்லர்
இந்நிலையில் சென்ற ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு சர்ப்ரைஸாக வந்து ஹாரர் ஜானர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 7 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகப் போகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்தன.
அருள்நிதியுடன் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ள நிலையில், சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ’இருள் ஆளப்போகிறது’ எனும் பெயரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பினைப் பெற்று வருகிறது. முதல் பாகம் நிறைவுற்ற இடத்தில் அருள்நிதியிடமிருந்தே தொடரும் கதையில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் மாயமான அருள்நிதியுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் ஆள்களாக நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் எப்படி?
திகில், சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பு கூட்டும் இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் முதல் பாகத்தில் அருள்நிதி மற்றும் நண்பர்கள் குழு டிமான்டி காலனி சென்று எடுத்து வந்த டாலர், அதனைத் தொடர்ந்து தொடரும் சிக்கல்கள், அமானுஷ்யங்கள், இறப்பு என கதை சென்று முடிவடைந்திருக்கும். அருள்நிதி இறப்பதும், டாலரை எடுத்துச் செல்ல டிமான்டி வருகை தருவதும் என முதல் பாகம் இரண்டாவது பாகத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இந்த ட்ரெய்லர் விட்ட இடத்தில் இருந்தே தொடர்கிறது.
அருள்நிதி சாகாமல் இருப்பது, அவரது ஆத்மா எங்கோ சிக்கி இருப்பது, அதற்கு தீர்வு தேடி புத்த பிட்சுக்கள், தேவாலயம் என பிரியா, அருண் பாண்டியன் இருவரும் பயணிப்பது என இந்த ட்ரெய்லர் சஸ்பென்ஸ் கலந்து அமைந்துள்ளது. மேலும் சாம்.சி.எஸ்சின் இசை இந்த ட்ரெய்லரில் பக்கபலமாக அமைந்து கவனமீர்த்துள்ளது.
மீண்டும் வெற்றிபெறுவார்களா?
விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பெரும் தோல்வியைத் தழுவியது. அதே போல் அருள்நிதி நடிப்பில் வெளியான திருவின் குரல், கழுவேத்தி மூர்க்கன் திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் அருள்நிதி - அஜய் ஞானமுத்து கூட்டணிக்கு இந்தப் படம் வெற்றியை மீட்டுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.