நடிகரும் இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் உறுப்பினருமான மேகன் மார்க்கல் ஆர்ச்டைப்ஸ் என்கிற ஸ்பாட்டிஃபை பாட்காஸ்டை வழங்கி வருகிறார். பிரபல நபர்கள் கலந்துகொண்டு உரையாடும் இதில் அண்மையில் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டார். அதில் மனநலம் மற்றும் செயல்பாடு பற்றி விவாதிக்க அவர் ஆர்க்கிடைப்ஸ் போட்காஸ்டில் இணைந்தார். 2015 ஆம் ஆண்டில் தான் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சையை நாடியதாகவும் அவர் அதில் பகிர்ந்துகொண்டார். பாலிவுட்டில் மனநலம் குறித்த விவாதங்களின் அடையாளமாக தீபிகா மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






தீபிகா அண்மையில் மனநலனுக்காக தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து வரும் காட்சி


தீபிகா தனது கருத்துக்கள் சிலரால் எப்படி அணுகப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் அது  எதிர்பார்த்ததுதான் என்றும் தீபிகா கூறினார், ஆனால் பெரும்பாலானோர் தான் மனம் திறந்து பேசியதை வரவேற்றனர் என்றார் அவர்.


மேலும் கூறுகையில், "இந்த பெரிய சுமை எனது தோள்களில் இருந்து தூக்கி எறியப்பட்டது போல் உணர்ந்தேன். இறுதியாக, எல்லோரும், சரி மனநோய் போன்ற ஒரு விஷயம் இருக்கிறது என ஒப்புக்கொண்டனர். உண்மை என்னவெனில் இதனை மறுப்பவர்கள் நாம் செய்யும் எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றார். 


மேலும், “வேறு சிலர், ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நான் இதைச் செய்கிறேன் அல்லது ஒரு மருந்து நிறுவனத்தால் எனக்கு கையூட்டு வழங்கப்படுவதாக அவர்கள் நினைத்தார்கள் அது குறித்து மீடியாவில் எல்லாம் செய்தி வெளியானது. நான் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து பெரிய அளவில் பணம் பெற்றதாக அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அவர்களை நம்ப வைத்து என்னால் என்னுடைய நிலையையும், எதிர்கொண்டவற்றையும் மாற்ற முடியாது” எனப் பகிர்ந்துகொண்டார் அவர். 


அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மன அழுத்தம் போன்றவை அமெரிக்க வார்த்தை என சொல்லி ஏளனம் செய்தது வலுத்த சர்ச்சையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.