500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.


கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும், பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.






500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் 2016-ஆம் ஆண்டு முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, "அரசின் கொள்கை முடிவுகளை நீதித்துறை ஆராயும் போது, எதில் தலையிட வேண்டும் எதில் தலையிடக் கூடாது என்ற லட்சுமணன் கோடு பற்றி அறிந்தே இருக்கிறோம். 


ஆனால், 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு செயல்முறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் வெறுமனே கொள்கை சார்ந்த நடவடிக்கையா என்பது குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து பதில் அளிப்பது அதன் கடமையாகும்" என தெரிவித்தது.


விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி பேசுகையில், "பணமதிப்பிழப்புச் நடவடிக்கை சரியான கண்ணோட்டத்தில் சவால் செய்யப்படாவிட்டால், இந்தப் பிரச்னை கொள்கை சார்ந்ததாகவே இருக்கும்" என தெரிவித்தார்.


உயர் மதிப்புடைய வங்கி நோட்டுகள் (பணமதிப்பிழப்பு) சட்டம் கடந்த 1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பொது நலன் கருதி பொருளாதாரத்திற்கு தீங்கி விளைவிக்கும் சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஆய்வு செய்யும் வகையில் இசட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 


இந்த பணமதிப்பிழப்பு கொள்கை சார்ந்த முடிவா அல்லது பயனற்றதா என்பதை தெரிந்து கொள்ள, இரு தரப்பினரும் உடன்படாததால் இந்த விஷயத்தை ஆராய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


நீதிபதிகள் பி.ஆர். கவாய், .ஏஎஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகிய நீதிபதிகள் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்கு பதில் அளித்து பேசிய நீதிபதிகள், "இந்த பிரச்சனைக்கு பதிலளிக்க, இது கொள்கை சார்ந்ததா அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டதா என்பதற்கு நாம் பதில் அளிக்க வேண்டும். 


அரசின் கொள்கை மற்றும் அதன் அதிகாரம் சார்ந்தது இந்த வழக்கின் ஒரு மக்கிய அம்சமாகும். லட்சுமண கோடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு எப்போதும் தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்பட்டது என்பதை ஆராய வேண்டும். அதை முடிவு செய்ய நாங்கள் ஆலோசனையைக் கேட்க வேண்டும்" என தெரிவித்தனர்.