சூர்யாவின் ‘சிங்கம்’ 


பிரபல கோலிவுட் இயக்குநர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம். நடிகை அனுஷ்கா, நடிகர் பிரகாஷ் ராஜ், மனோராமா எனப் பலர்  நடிப்பில் போலீஸ் ஆக்ஷன் - செண்டிமெண்ட் கலந்த படமாக வெளியான சிங்கம், இன்று வரை சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அதனைத் தொடர்ந்து வெளியான சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் சிங்கம் 1 அளவுக்கு வரவேற்பைப் பெறாவிட்டாலும், பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளின. இந்நிலையில் மறுபுறம் சிங்கம் திரைப்படத்தின் வெற்றியால் பாலிவுட்டில் இப்படம் உரிமம் பெறப்பட்டு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியானது.


இந்தி சிங்கம்


பிரபல நடிகர் அஜய் தேவ்கன், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று மாஸ் ஹிட் அடித்தது. 157 கோடிகளை வசூலித்த இந்தி சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகம் சிங்கம் ரிட்டர்ன்ஸ் எனும் பெயரில் 2014ஆம் ஆண்டு வெளியாகி மீண்டும் சூப்பர் ஹிட் அடித்தது.


இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் எகெய்ன் (Singham Again) படம் இந்தக் கூட்டணியில் மீண்டும் வரவிருக்கிறது. இப்படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த கரீனா கபூரே ஹீரோயினாக நடிக்கும் நிலையில், தீபிகா படுகோன்  (Deepika Padukone) முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.


தீபிகாவின் மாஸ் அவதாரம்


இந்நிலையில் சக்தி ஷெட்டி எனும் கதாபாத்திரத்தில் போலீஸ் உடையில் வில்லத்தனமான சிரிப்புடன் தீபிகா படுகோன் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.


தீபிகாவின் புகைப்படங்களுக்கு அலியா பட் உள்ளிட்ட பல சினிமா துறையினரும், ரசிகர்களும் இதயங்களையும் ஃபயர் எமோஜிக்களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.






ரோஹித் ஷெட்டியின் பிற போலீஸ் படங்களான சிம்பா, சூர்யவன்ஷி இரு படங்களிலும் நடித்த ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் ஆகிய நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.


ரோஹித் ஷெட்டியின் ‘காப் யுனிவர்ஸ்’


ரோஹித் ஷெட்டி தனது ‘சிம்பா’ படம் தொடங்கியே தன் படங்களில் தான் உருவாக்கிய போலீஸ் பாத்திரங்களைக் கொண்டு ‘காப் யுனிவர்ஸ்’ (Cop Universe) உருவாக்கி பிற பாத்திரங்களையும் தன் படங்களில் கொண்டு வரத் தொடங்கினார். லோகேஷின் எல்.சி.யு போல் இந்தியில் இந்த யுனிவர்ஸூக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.


‘சூர்யவன்ஷி’ படத்திலும் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த காப் யுனிவர்ஸில் நடிகை தீபிகா படுகோனும் ஒரு போலீஸாக தற்போது இணைந்துள்ளார். 


அடுத்த ஆண்டு சிங்கம் அகெய்ன் படம் வெளியாகும் நிலையில், இந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதால் ஒட்டுமொத்த பாலிவுட்டும் பெரும் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளது,