பிரபல டி.சி.காமிக்ஸ் நிறுவனம் சூப்பர்மேன் 2.0வைத் தனது அண்மைய காமிக்ஸ் வெளியீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி புதிய சூப்பர்மேன் இருபால் ஈர்ப்பாளராக (Bisexual) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் 11 அக்டோபரை அமெரிக்கா நேஷனல் கமிங் அவுட் டேவாகக் (National coming out day) அனுசரிக்கிறது. தன் பாலின அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் சூப்பர்மேன், பேட்மேன் உள்ளிட்ட காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய டிசி காமிக்ஸ் நிறுவனம் புதிய சூப்பர் மேன் குறித்த இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 






 


வருகின்ற நவம்பர் மாத டிசி காமிக்ஸ் இதழில் இந்தப் புதிய கதாப்பாத்திரம் வெளியாக உள்ளது.இந்தக் கதையின்படி சூப்பர்மேன் தனது நண்பன் ஜே நகமூராவுடன் காதல் உறவில் இருப்பார். ‘சூப்பர்மேன் - சன் ஆஃப் கால் எல்’ (Superman Son of kal-el) என்கிற புதிய சீரியஸின் ஒரு அங்கமாக இந்த காமிக்ஸ் வெளியாக உள்ளது. அதாவது பழைய சூப்பர்மேனான க்ளார்க் கெண்ட்டிடம் இருந்து புதிய சூப்பர்மேன் ஜான் கெண்ட் தனது சக்திகளை எப்படிப் பெறுகிறார் என்பதுதான் கதை. 


இந்த சூப்பர்மேன் 2.0 குறித்துக் கூறும் இதன் எழுத்தாளர் டாம் டெய்லர் ‘சூப்பர்மேனின் புதிய கதாப்பாத்திரம் குறித்து எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது இன்றைய தேதியில் சூப்பர்மேன் எப்படி இருப்பார் என யோசித்தேன்.அதன் வெளிப்பாடுதான் இது. 


‘இந்தப் புதிய கதையைப் படிப்பவர்கள், இந்த சூப்பர்மேன் தன்னைப் போன்றவர்தான் தனக்காகத்தான் பேசுகிறார் என்கிற நம்பிக்கை இதனைப் படிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதுதான் இந்தப் புதிய சூப்பர்மேனை உருவாக்கியதன் நோக்கம்’ என்கிறார் அவர். 


இந்த புதிய சூப்பர்மேனுக்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் வேண்டுமென்றே இந்தப் புதிய கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர், ‘தாங்கள் பாலின வேற்றுமைக்கு ஆதரவானவர்கள்தான் என்றாலும் கதைக்குப் பொருந்தாதை ஏன் திணிக்கவேண்டும் எனக் கமெண்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.