அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாகக் கழுத்தில் டயருடன் சுற்றித் திரிந்த காட்டுமான் சுதந்திரமாக சுற்றுவதற்காகத் தற்போது அதன் கழுத்தில் உள்ள டயர் அகற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் கொலராடோ பூங்கா மற்றும் கானுயிர் அலுவலகம் இந்தப் பணியைச் செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கொலராடோ பூங்கா மற்றும் கானுயிர் அதிகாரி ஒருவர் மலை ஆடுகள் குறித்த கணக்கெடுப்பை எடுத்த போது, இந்த ஆண் காட்டுமானைப் பார்த்துள்ளார். எவான்ஸ் வில்டர்நெஸ் என்ற மலைச் சிகரத்திற்கு அருகில் இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
`காட்டுமான்கள் மனிதர்களிடம் இருந்து விலகி வாழ்பவை. அதனைப் பிடிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கொலராடோ பூங்கா மற்றும் கானுயிர் அதிகாரி ஸ்காட் முர்டாக் தெரிவித்துள்ளார். `கழுத்தில் டயருடன் இந்தக் காட்டுமானைக் கண்டுபிடிப்பதும், நெருங்குவதும் சவாலான பணியாக இருந்தது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தக் காட்டுமான் பல்வேறு கண்காணிப்புக் கேமராக்களில் சிக்கியுள்ளது. மேலும் பார்க் என்ற இடத்திற்கும், ஜெபர்சன் என்ற இடத்திற்கும் இடையில் இந்தக் காட்டுமான் தொடர்ந்து பயணிப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் காட்டுமானைக் கண்காணித்ததில், அதன் கழுத்தில் சிக்கியிருந்த டயரின் காரணமாக, அதனால் உண்பதிலும், நீர் அருந்துவதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும், பிற காட்டுமான்களுடன் சண்டையிடும் போதோ, மரக்கிளைகள் வழியாகப் பயணிக்கும் போதோ, அதன் உயிருக்கு ஆபத்தாக அந்த டயர் மாறிவிடலாம் என்பதால் அது அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொலராடோ பூங்கா மற்றும் கானுயிர் அலுவலகம் சார்பில், இந்தக் காட்டுமானைக் கண்டுபிடித்தால் தகவல் தெரிவிக்குமாறு படங்களும், வீடியோக்களும் கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்தன. கொலராடோ மாகாணத்தின் பைன் பகுதியில் இருந்து கிடைந்த தகவலின் அடிப்படையில் வன அதிகாரிகள் இந்தக் காட்டுமானுக்கு உதவியுள்ளனர்.
சுமார் 300 கிலோ எடையுள்ள இந்தக் காட்டுமானுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, அதன் கழுத்தில் மாட்டியிருந்த டயர் அகற்றப்பட்டது. அப்போது அதன் கொம்புகள் சிறிது வெட்டப்பட்டு, டயர் எளிதாக நீக்கப்பட்டது. `டயரின் நடுவில் இருந்த இரும்பை எங்களால் வெட்ட முடியவில்லை. டயரை வெட்டிவிட்டு, காட்டுமானுக்கு உதவுவது தான் முதலில் எங்கள் திட்டமாக இருந்தது. அது நடைபெறாததால், டயரை எப்படியாவது நீக்கினால் போதும் என்று இவ்வாறு முடிவு செய்தோம்’ என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த டயருக்குள் சுமார் 5 கிலோ குப்பை இருந்ததாகவும், டயரை நீக்கியவுடன் காட்டுமானின் மொத்த எடையில் சுமார் 16 கிலோ எடை குறைந்ததாகவும் அதிகாரிகள் கூறி, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தக் காட்டுமானின் கழுத்தில் டயரை யார் மாட்டிவிட்டார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. குளிர்க்காலத்தின் போது, காட்டுமானின் கொம்புகள் உதிர்வதால் எங்கேயாவது டயரைக் கழுத்தில் மாட்டியிருக்கலாம் எனவும் வன அதிகாரிகள் கருதுகின்றனர்.