இப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் என்றால் குறைந்தபட்ச நடன திறமை வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது. ஒரு சிலர் தான் அதில் விதிவிலக்கு. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதிகள், 2000 த்தின் முற்பகுதிகளில் இருந்த நடிகர்களில் கமல்ஹாசனை தவிர மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுமே நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தான். அப்போது கிரேஸ்ஃபுல்லான தன் நடனத்தால் பல பெண்கள் இதயத்திலும் இடம்பிடித்த நடிகர்தான் தளபதி விஜய். அந்த சமயத்தில் விஜய்க்கு கொரியோக்ராஃபி செய்வதற்கு மாஸ்டர்களே மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவார்களாம். நிறைய ஸ்டெப்களை ஆடமுடிந்தவர் என்பதால் தங்களது கற்பனை திறனுக்கு தீனி போடும் என்று கூறுவார்கள். அப்படி அப்போதைய விஜய் படங்களுக்கு அதிகமாக ராகவா லாரன்ஸ் மாஸ்டர் தான் கோரியோக்ராஃபி செய்வார். அப்போது அவருடைய நடன குழுவில் இருப்பவர்களை நாம் எல்லா விஜயின் பாடல்களிலும் பின்னணி நடன கலைஞர்களாக காண முடியும். அப்படி பல வருடம் பின்னணியில் ஆடுவதால் அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாமல் போய்விடும். ஆனால் அவர்களும் சினிமாவில் பல வருடங்கள் இருந்து உழைத்தவர்களாக இருப்பார்கள். அப்படி பின்னணி நடன கலைஞராக இருந்து லாரன்ஸ் மாஸ்டரின் அசிஸ்டன்டாக மாறிய நடன இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் விஜயுடன் ஆடிய ஸ்வாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.



அவர் பேசுகையில், "நான் ஒரு மிகப்பெரிய விஜய் ஃபேன், அவர் எந்த மாதிரி ட்ரெஸ் போடுகிறாரோ அதே போல தான் அப்போதெல்லாம் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன், அவரை போலவே இருக்கிறேன் என்று பலர் கூறுவதால் நான் அதை தொடர்ந்து செய்தேன். அது லாரன்ஸ் மாஸ்டருக்கும் தெரியும், என்னிடம் வந்து நாளைக்கு உன் ஹீரோ படம்தான் டா என்றார், அடுத்த நாள் துள்ளதா மனமும் துள்ளும் பாடல் ஷூட். எப்போதும் ஹிட் ஆகும் பாடலை தெரிந்துகொண்டு ஹீரோ பக்கத்தில் சென்று நின்றுகொள்கிறாய் என்று லாரன்ஸ் மாஸ்டர் கூறுவார். அப்போதைய விஜய் பாடல்கள் அனைத்தும் ஹிட் தான். ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் நல்ல மழை, முழங்கால் வரை தண்ணீர் நிற்கிறது செட்டில், விஜய் காரில் வந்து இறங்குகிறார், 3 நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லை, பிறகு ஷூட்டிங் ஆரம்பித்தபோது, அவர் அருகில் உள்ள பொசிஷனில் நின்றுகொண்டிருக்கிறேன், அப்போது ஒரு கண்ணாடி போட்டிருந்தேன், விஜய் உள்ளே வருவதற்கு முன் பின்னால் இருப்பவர்கள் அவரே கண்ணாடி போடல, நீ ஏன் போட்ருக்க, உண்ண பின்னாடி நிக்க வச்சுருவாங்க என்று பயமுறுத்தினார்கள், நான் அவர் வருவதற்குள் கண்ணாடியை கழற்றிவிட்டேன். அருகில் வந்த அவர் 'ஏன் கண்ணாடிய கழட்டிட்டீங்க, போட்டுக்கோங்க நல்லா இருந்த்துச்சு உங்களுக்கு' என்றார். பின்னர் கண்ணாடியை போட்டுகொண்டு ஆடினேன்." என்று கூறினார்



"அதன் பிறகு பல பாடல்களில் நான் அவர் அருகில் நின்று ஆடியிருக்கிறேன். பல படங்களில் என்னை பார்த்த அவர் நண்பர்கள், யார் அது உன் தம்பியா உன்ன மாதிரியே இருகிறார் என்று கேட்டதாக அவரே என்னிடம் இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறார். அதன் பிறகு விஜய் அஜித் என இரண்டு நடிகர்கள் கூடவும் ஒரே நேரத்தில் ஷூட் இருந்தது. காலையில் இங்கு, இரவு அங்கு என்று 24 மணிநேரம் தூங்காமல் ஆடிய காலமெல்லாம் இருக்கிறது. அப்போதெல்லாம் நான் அசிஸ்டண்ட் ஆகி விட்டேன் லாரன்ஸ் மாஸ்டரிடம். அப்போதுதான் சரக்கு வச்சுருக்கேன் பாடல் ஷூட் செய்கிறார்கள். நான் வழக்கம் போல விஜய்ஸ் சார் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன். ஆனால் ஒரு போர்ஷனில் நடிகை மீனா நடுவில் நிற்க அந்த பக்கம் விஜய் சார், இந்த பக்கம் நான் என்று இரண்டு பக்கமும் நிற்போம், எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து வெவ்வேறு ரியாக்ஷன் கொடுக்க வேண்டும், ஆனால் மீனா மேம் 'இவரை மாத்துங்க சார் எனக்கு கன்ஃபியூஸ் ஆகுது ரியாக்ஷன் மாத்தி கொடுத்துட்டு இருக்கேன்' ன்னு லாரன்ஸ் மாஸ்டரிடம் கூறிவிட்டார்." என்று தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.