இந்திய திரைப்பட துறையை சார்ந்த திரை கலைஞர்களுக்கு தங்களின்  வாழ்நாள் சாதனையை  பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் விருது. இந்த விருது இந்திய திரைப்பட துறையின் தந்தை என கருதப்படும் தாதா சாகேப் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 


 



சிகரம் தோட்ட கலைஞர்களின் கௌரவம்:


 


இந்திய திரைப்பட துறையில் சாதனை புரிந்த எல்.வி. பிரசாத், ராஜ்குமார், நாகிரெட்டி, டி. ராமநாயுடு, கே. விஸ்வநாத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மற்றும் பலர் இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 1960 - 70 வரை உள்ள காலகட்டத்தில் சிறந்த நடிகையாக விளங்கிய ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 






 


ஈடு இணையில்லா சேவை:


பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டின் ”ஹிட் கேர்ள்” என கருதப்பட்ட ஆஷா பரேக், திரைப்பட நடிகை மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஏற்கனவே 1992ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. 


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஆஷா பரேக் 1959ம் ஆண்டு வெளியான  "தில் தேக்கே தேகோ" எனும் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி மிகவும் பெரிய அந்தஸ்தை பெற்றார். ஆரம்ப காலத்தில் ஒரு கவர்ச்சி நடிகையாக, சிறந்த நடன கலைஞராக மட்டுமின்றி ஒரு முரட்டு தனமான ஹீரோயினாகவும் கருதப்பட்டார். ஆனால் அவரின் இந்த அடையாளத்தை 1969ம் ஆண்டு இயக்குனர் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் வெளியான "தோ பதான்" என்ற திரைப்படம் மூலம் தகர்த்து எறிந்தார். இந்த திரைப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 


தயாரிப்பாளர் அவதாரம்:


 


பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த புகழின் உச்சியில் இருந்த ஆஷா பரேக் ஹிந்தி திரைப்படம் மட்டுமின்றி குஜராத்தி, பஞ்சாபி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பில் சிறந்து விளங்கிய ஆஷா "ஆக்ருதி" என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலாஷ் கே பூல் , பாஜே பாயல், கோரா ககாஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தார். 



முதல் பெண் தலைவர் அந்தஸ்து:


 


அது மட்டுமின்றி இவரின் திரைத்துறை பணி ஒரு படி மேலே உயர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவின் முதல் பெண் தலைவராக 1998 - 2001 வரை பொறுப்பேற்றார். இப்படி ஆஷா பரேக்கின் பணி திரைத்துறையில் பயணித்தது. அவரின் இந்த ஈடு இணையில்லா பணியை கௌரவிக்கும் வகையில் இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரை கலைஞரான ஆஷா பரேக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு கௌரவித்துள்ள இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.