தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள கவின், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த கவின், படிப்படியாக வளர்ந்து திரைப்படங்களில் உதவி இயக்குநராக அறிமுகமானர். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி அடைந்து இருந்தாலும், ’லிப்ட்’, ’டாடா’ படத்தின் மூலம் கவின் பிரபலமானார். டாடா படத்தில் தனியாக குழந்தையை வளர்க்கும் தந்தையாக இருந்த கவினின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 


தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதலை மையப்படுத்திய படத்தில் கவின் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களை ஆனந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை கவின் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மிகவும் ரகசியமாக இருந்த இவர்களின் காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரு வீட்டாரின் முன்னிலையில் கவினின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கவினின் திருமணம் குறித்த செய்தி வெளியானதும் அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். 


முன்னதக 2019ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்கேற்றார். பிக்பாஸ் மூலம் கவினுக்கு ரசிகர்கள் பலர் கிடைத்திருந்தாலும், காதல் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் சீசன் 3-இல் கவினுடன் சக போட்டியாளராக இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவும் பங்கேற்றிருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவருக்கும், கவினுக்கும் காதல் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் அவரவர் பாதையில் செல்ல தொடங்கினர். இருவரும் தங்களுக்கு காதல் இல்லை என்றதுடன், திரைப்படங்களில் நடிப்பதில் இருவரும் கவனம் செலுத்தினர். 


இந்த நிலையில் கவின் காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது