கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, தான் இயக்கி நடித்து வரும் டி50 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக தனுஷ் பகிர்ந்துள்ள தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தனுஷ் இயக்கம், நடிப்பு


நடிகர் தனுஷின் 50ஆவது படமாக உருவாகி வரும் டி50 திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். சன் பிச்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், இப்படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் தொடங்கியதாகத் தகவல் வெளியானது.


மேலும், கேப்டன் மில்லர் படத்துக்காக தான் வளர்த்திருந்த நீண்ட முடியை கட் செய்து மொட்டை போட்டு தனுஷ் கெட் அப்பை  மாற்றிய நிலையில், இந்தப்ப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 


பிரம்மாண்ட செட்கள் அமைத்து இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருவதாகவும்,  ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைப்பதாகவும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஷ்ணு விஷால்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன்,  சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


சூப்பர் அப்டேட் தந்த தனுஷ்


இந்நிலையில், ஷூட்டிங் தொடங்கி மூன்றே மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளதாக தனுஷ் தகவல் பகிர்ந்துள்ளார். மொட்டைத் தலையுடன் சன் செட்டை பார்க்கும்படியான தன் புகைப்படம் ஒன்றையும் தனுஷ் பகிர்ந்துள்ள நிலையில், இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 






டி50 திரைப்படத்துக்கு ராயன் எனப் பெயரிடப்பட உள்ளதாக படம் தொடங்கியது முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் குழந்தை நட்சத்திரத்திலிருந்து நடிகையாக உயர்ந்துள்ள அனிகா சுரேந்திரன் இப்படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷ் தற்போது பகிர்ந்துள்ள அப்டேட் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கேப்டன் மில்லர்


மற்றொருபுறம் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணைந்துள்ள கேப்டன் மில்லர் படமும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனின் காட்சிகள் சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.


கேப்டன் மில்லர் வடசென்னையை மையப்படுத்திய கதை எனக் கூறப்படும் நிலையில், டி50 திரைப்படம் போர் சூழலை மையப்படுத்திய பீரியட் படம் எனக்கூறப்படுகிறது, ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் படம்  வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், டிச.22  நடிகர் ஷாருக்கானின் டங்கி, பிரபாஸின் சலார் படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் பெரும் பட்ஜெட் படங்களுடன் தனுஷின் கேப்டன் மில்லர் போட்டிபோடுமா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.