15 வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டவர் இசையமைப்பாளார் டி.இமான். இசையமைப்பாளர்கள் சிலரிடம் கீ போர்டு ப்ளேயராக இருந்த டி. இமானின் திறமையை பார்த்த சீரியல் தயாரிப்பாளர் குட்டி பத்மினி, சன் டிவியில் ஒளிப்பரப்பான  ‘கிருஷ்ண தாசி’ சீரியலின் பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.


அதன் பின்னர் கோலங்கள், போலீஸ் டைரி என பல சீரியல்களுக்கு இசையமைத்த டி.இமானை குட்டி பத்மினி தான் தயாரித்த  ‘காதலே சுவாசம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். டி.இமானின் இசை தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரனுக்கு மிகவும் பிடித்துப் போக, விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் தான் தயாரித்த  ‘தமிழன்’படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை டி இமானுக்கு வழங்கினார்.




அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி யின்  ‘கிரி’ ‘தலைநகரம்’ சத்யராஜ் நடித்த  ‘கோவை பிரதர்ஸ்’, அருண் விஜயின்  ‘மருதமலை’, நகுல் நடித்த  ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். மிக நீண்ட காலமாக டி இமான் திரைத்துறையில் இயங்கினாலும், அவரது திறமைக்கான இடம் கொடுக்கப்படாமலே இருந்தது. ஆனால் அதனை மொத்தமாக, பிரபு சாலமோன் இயக்கிய  ‘மைனா’ படத்தில் சரி கட்டினார் இமான்.


மிக சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தின் பெரும் பலமாக டி.இமானின் இசை அமைந்தது. இந்த படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் டிவி விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு,  ‘தம்பிகோட்டை’, சிவகார்த்திகேயனின் ’மனம் கொத்தி பறவை’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த டி. இமான் மீண்டும்  ‘கும்கி’ படத்தில் இசையில் அடுத்த உச்சம் தொட்டார். மலை, யானை, காதல் என சென்ற படத்தில் சிச்சுவேஷனுக்கு தகுந்த படி இசையமைத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.




இந்தப் படத்திற்கு பிறகு டி. இமானின் கிராஃப் தமிழ் சினிமாவில் உயரத்தொடங்கியது. தொடர்ந்து சிவகார்த்திகேயனின்  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்  ‘ஊதா கலரு ரிப்பன்’ என மெட்டு போட்ட அவர், ரம்மியில்  ‘கூட மேல கூட வச்சு’ என மெட்டுப்போட்டு கிரங்க வைத்தார். அதன் பின்னர் விஜயின்  ‘ஜில்லா’, ஜெயம் ரவியின்  ‘ரோமியோ ஜூலியட்’,  ‘மிருதன்’,  ‘போகன்’ ’டிக் டிக் டிக்’, விஷாலின்  ‘பாயும் புலி’, ’மருது’ விஜய் சேதுபதியின்  ‘கருப்பன்’, கார்த்தியின்  ‘கடை குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். இதில் பெரும்பான்மையான பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.


அஜித்துடன்   ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த டி.இமானுக்கு, அதில் இடம் பெற்ற  ‘கண்ணான கண்ணே6’ பாடலுக்குக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.




ஜோதிகாவின்  ‘உடன் பிறப்பே’ படத்தில் கரைய வைத்த இமான்.. ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெரைட்டியான இசையை கொடுத்து மிரட்டினார். தற்போது  ‘எதற்கும் துணிந்தவன்’, கேப்டன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இமானை தாயின் இழப்பு சோகக்கடலில் தள்ளியது. அதன் பின்னர் பிட்னஸ் பக்கம் சென்ற இமான் தனது எடையை 42 கிலோ வரை குறைத்தார். அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உச்சம் தொட வாழ்த்துகள் இமான்.. கீப் ராக்கிங்....