சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 17ம் தேதி நிலவரப்படி, சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 85.6 அமெரிக்க டாலராகும். இது, கடந்த 2014 ஆண்டிற்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உயர்வாகும். மேலும், மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இருப்பினும் இன்று, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 80வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாலும், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாலும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசியா நாடுகளில் தற்போது பதட்டமான சூழல் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்,2021 நவம்பர் 4ம் தேதி முதல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்தது. பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய முடிவு ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்