CWC Pugazh: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான புகழ், வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தினை பெயராகக் கொண்ட புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். 


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர் புகழ். தொடர்ந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது பேச்சால் பிரபலமான புகழுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடித்திருந்த வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் நடித்திருந்த அயோத்தி, அருண் விஜய் நடித்திருந்த யானை, சிவகார்த்திகேயனின் டான், கவுதம் கார்த்தி நடித்த 1947 உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ் நடித்திருந்தார். 


இதுவரை முன்னணி ஹீரோக்களின் படத்தில் துணை நடிகராக நடித்திருந்த புகழ், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். எம்.ஜே.இளன் இயக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தில் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவாக முருகதாஸ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர்களுக்கு ஹீரோயினாக வர்ஷினி மற்றும் அக்‌ஷதா இணைந்துள்ளனர். காதல் தோல்வியை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என அதன் இயக்குநர் எம்.ஜே. இளன் கூறி உள்ளார். 




இது குறித்து பேசிய அவர், “ காதல் செய்வது தவறு இல்லை. ஆனால், அந்த காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொள்ள கூடாது. காதலுக்காக எதிர்காலத்தை வீணடிப்பதை தவறு என கூறும் படம் தான் துடிக்கிறது மீசை. இளைஞர்களின் காதலை இந்தப் படம் பேசும்” எனக் கூறியுள்ளார்.


கடந்த வாரம் பூஜையுடன் நடந்த இப்படப்பிடிப்பு நிகழ்வில், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். வீரப்பாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் ஆங்கிலேயரை எதிர்த்து பேசும்போது, துடிக்கிறது மீசை என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். அந்தக் கோபத்தை குறிப்பிடும் விதமாக இந்தப் படத்துக்கு துடிக்கிறது மீசை என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் எம்.ஜே.இளன் கூறியுள்ளார். 


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திண்டிவனம் அருகே எளிமையான முறையில் புகழ் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. புகழும், பென்சியாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் இயக்குநர் சமுத்திரகனி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Actor Vishal: ‘லட்சுமி மேனனை கல்யாணம் பண்ணப்போறேனா?’ : கடுப்பான விஷால்.. சோகத்தில் ரசிகர்கள்..