நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இமயமலை போவதை தவிர்த்து வந்தார்.


தற்போது, ஜெயிலர் பட ரிலீஸூக்கு முன், இமயமலைக்கு கிளம்பிச் சென்றார் நடிகர் ரஜினி. இந்நிலையில், ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதில் ஒரு புகைப்படத்தில் ரஜினி தனது  நண்பர்களுடன் போஸ் கொடுத்துள்ளார். வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்துள்ள ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து புன்னகையுடன் காட்சியளிக்கிறார். அவர் நெற்றியில் ஒரு திலகமிட்டுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் அதன் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றை முடித்துக்கொண்டு அவர் இமயமலை சென்றுள்ளார். 




நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தையும் முடித்துவிட்டு  இமயமலைக்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இருப்பினும், 2010இல், அவர் இமயமலை செல்வதில் இருந்து பிரேக் எடுத்தார்.


இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்த காலா படத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்ட ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை சென்றார். அதன் பின் 2019ஆம் ஆண்டு அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பாக அக்டோபர் மாதம் இமயமலைக்குச் சென்றார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இமயமலைக்கு செல்லாமல் மூன்று ஆண்டுகள் தவிர்த்தார். தற்போது ஜெயிலர் படத்தை முடித்து விட்டு இமயமலை சென்றுள்ளார். 


ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கொண்டாட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, அறந்தாங்கி நிஷா, சிவராஜ்குமார், சுனில், மிர்னா, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் பல்வேறு முந்தைய சாதனைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இந்தப் படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில், இப்படம் இந்தியாவில் வெளியான முதல் நாளில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. 


ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தனது முதல் நாளில் 52 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் ரூ. 23 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் 7 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடி மற்றும் மற்ற மாநிலங்களில் சேர்த்து 3 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் முதல் நாளில் வசூலித்து இருக்கும் என கூறப்படுகிறது.  பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. 


மேலும் படிக்க,


Bhartiya Bill Replaces India : ’பாரதிய’ என மாற்றப்படும் இந்திய சட்டங்கள்.. மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா