பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்.


பாலிவுட் நடிகர் நடித்து அண்மையில் ஜீ ஃபைவில் வெளியாகியிருக்கும் படம்  சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹே (sirf ek bandha kaafi hai). பிரபல வழக்கு ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்த படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த மனோஜ் வாஜ்பாய் ”சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த போக்கு நின்றாகவேண்டும். இந்தப் பிரச்சனைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு நமக்கு ஏற்படுகையில் இந்த நிலை நிச்சயம் மாறும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மக்கள் கூடுதல் சிரத்தை எடுத்து சிந்திக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.


சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹே { sirf ek bandha kaafi hai). படத்தின் கதை


 கடந்த 2013 ஆம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த ஒரு நிஜக்கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். ஆசாராம் பாபு என்று அறியப்படும்  ஹசுமை சிமலனி ஹார்பலனி  என்கிற சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 16 வயது சிறுமி ஆசாராம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்தார். ஆசாராம் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை பூனம் சந்த் சோலாங்கி என்கிற வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக வாதிட்டார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜெத் மலானி, சல்மான் குர்ஷித் மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியவர்களுடன்  ஆகியவர்கள் ஆசாராம் சார்பாக வாதிட்டனர். இவர்களை எதிர்த்து  கிட்டதட்ட ஐந்தாண்டுகள் சோலாங்கி  இந்த வழக்கை விடாமுயற்சியுடன் வாதாடி இந்த வழக்கை வென்றார்.


யார் இந்த சோலாங்கி?


ராஜஸ்தானில் ஒரு மத்தியதர குடும்பத்தில் மூன்று  பெண்களுக்கு சகோதரனாக  பிறந்தவர் சோலாங்கி. கடும் சிரமங்களுக்கு மத்தியில் தனது வக்கீல் படிப்பை முடித்த சோலாங்கி போக்ஸோ சட்ட வழக்குகளை வாதாடுவதில்  திறமையானவராக அறியப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் சோலாங்கியை இந்த வழக்கை தங்கள் சார்பாக வாதாட கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கை ஐந்து ஆண்டுகள் கடும் போராட்டங்களுக்குப்பின் வெற்றிபெற்ற சோலாங்கி ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கவில்லை.


”நாங்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருந்தோம், பணத்திற்காக அல்ல. அதே நேரத்தில் எதிர்தரப்பில் ஒரு நாள் விசாரணைக்காக மட்டுமே லட்சக்கணக்கில் பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழலில் என 2018-ஆம் ஆண்டு இந்தியன் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் சோலாங்கி. மேலும் இந்த வழக்கில் இருந்து வெளியேறச்சொல்லி பல கொலை மிரட்டகளும் கோடிக்கணக்கில் பணமும் லஞ்சமாக கொடுக்க முயற்சித்தார்களாம்.