பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விக்ரம் தற்போது பூரண குணம் அடைந்து படப்பிடிப்புக்கு செல்ல தயாராகி இருக்கிறார். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. 


வருகிற 15-ஆம் தேதி முதல் தங்கலான் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது என்றும் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார். விக்ரம் தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தங்கலான் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், "கேஜிஎஃப் தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கைதான் தங்கலான் படத்தின் மையக்கரு. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பா.ரஞ்சித் 1980-களை நேர்த்தியாக காட்டியிருந்தார். அதே நேர்த்தியை தங்கலான் படத்திலும் ரசிகர்க.ள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றார். 


தங்கலான் இயக்குநர் ரஞ்சித்தின் கனவு படம். ஒரு மனிதனின் 70 வருட காலகட்டத்தை தங்கலான் நமக்கு காட்டவிருக்கிறது. அதாவது 1870-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தை தங்கலான் நமக்கு காட்டும். கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது, அதில் தங்கலானின் பங்கு என்ன என்பதை இந்தப் படம் பேசுகிறது" என்றார். 


தங்கலான் திரைப்படம் குறித்து ரசிகர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, ”நான் இதுவரை நடித்திருக்கும் படங்களிலேயே, மனதளவிலும் உடலளவிலும் ‘தங்கலான்’ மிகவும் கடினமான திரைப்படம். நிச்சயம் ஒருவரது உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை தனிப்பட்ட முறையில் சோதிக்கும் ஒன்றாக இது இருக்கிறது.  அதன் மூலம் என் எல்லைகளை தெரிந்துகொள்ள இது உதவியுள்ளது. விக்ரம் சார் செட்டில் உள்ள ஒவ்வொரு நடிகருக்கும் தன்னால் முடிந்த அளவு உதவினார்” என தெரிவித்து இருந்தார்.