ஒடிஷா ரயில் விபத்து மீட்புப் பணிகளை பார்வையிட்டுத் திரும்பிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


”முதலமைச்சர் என்னையும் அமைச்சர் சிவசங்கரனையும், அரசு அதிகாரிகளையும் உடனடியாக கிளம்பி செல்ல சொன்னார்கள். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


அங்கு சென்று நாங்கள் ஆய்வு செய்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. தொடர்ந்து அங்கு உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவக்கிடங்குக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கும் விசாரித்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. யாரும் கேட்டு வரவும் இல்லை. அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோதும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை என முதலில் கூறினார்கள்.


அதன் பின் முதலமைச்சருடன் பேசும்போது ரயிலில் பயணித்தவர்களில் 28 பேர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒடிசா அரசு அங்கு ஒரு சிறப்பு உதவி எண்கள் கொடுத்து சேவை மையத்தைத் தொடங்கியுள்ளனர். அங்கு சென்று விசாரித்தபோதும் தமிழர்களிடமிருந்து அழைப்பு வரவில்லை எனத் தெரிவித்தனர்.


8 நபர்களை தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அரசு அதிகாரிகளிடம் பேசியதில் 2 பேரை கண்டறிந்துவிட்டோம். காலையில் பத்திரிகையில் பெயர்கள் அறிவித்திருந்தோம். எஞ்சியுள்ள நபர்களான அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகிய ஆறு பயணிகளும் பத்திரமாக இருப்பதாக உடன் பயணித்த பயணிகள் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து, அவர்கள் நமக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அவர்களுடைய கோச் எண்கள், D3, D4, D7, D9,S1, S2. இந்த கோச்களில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு கிடையாது, இது உடன் பயணித்த பயணிகள் கொடுத்திருக்கும் செய்தி.


அரசு அதிகாரிகள் அங்கு தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்தி வரும்” எனப் பேசினார்.


தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்,  28 நபர்களில், 21 பேரிடம் பேசி விட்டோம். 7 பேரை மட்டும் கண்டறிய முடியவில்லை என முதலமைச்சரிடம் முன்னதாகத் தெரிவித்தோம், அவர் அங்கேயே இருந்து ஆய்வு செய்து திரும்ப சொன்னார். 275 நபர்கள் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். புகைப்படங்கள் வெளியிட்டு உடல்களை கண்டறிந்து ஒப்படைத்து வருகின்றனர். 88 பேரின் உடல்கள் தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கும் சென்றும் நாங்கள் பார்த்தோம்.


ஆனால் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என, விரைவில் நல்ல செய்தி வரும். இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம், ஒன்றிய அரசு இந்தத் தவறை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து.


நேற்றைய நிலையில், 8 பேர் உடல்களை கண்டறிய முடியாத நிலை இருந்ததால்,  இறந்தவர்களிடன் உடல்களை ஃபோட்டோ எடுத்து தருமாறு நாங்கள் ஒடிஷா அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு மணி நேரம் அங்கு நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம்.


இது வேதனையான அனுபவம். ஒடிஷா அரசு விபத்து நடந்த இடத்தில் இருந்து மக்களை பேருந்துகள் வைத்து புவனேஸ்வருக்கு பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கு சென்று சேர இரவு 1 மணி ஆகிவிட்டது. அதற்குள் விபத்தில் உயிர் தப்பிய தமிழர்கள் விமானத்தில் இங்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டனர்” எனப் பேசியுள்ளார்.