தன்னுடைய வாழ்க்கையைப்போலவே தன்னைப் பற்றிய படமும், பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்


800


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 800 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.


முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. 800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முத்தையா முரளிதரன் 800 படம் உருவானதில் இருந்து ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை பற்றி பேசினார். வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திரையரஙகுகளில் வெளியாக இருக்கிறது 800 திரைப்படம்.


வெங்கட் பிரபுதான் காரணம்


சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்தையா முரளிதரன். “ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் ஒரு நற்பணி மன்றம் நடத்தி வந்தேன். கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட்பிரபு இலங்கை வந்திருந்தார். என்னுடைய மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.


என்னுடைய வீட்டில் நான் வாங்கிய விருதுகளை எல்லாம் பார்த்த வெங்கட் பிரபு, ”ஏன் உங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது” என்று கேட்டார். அதில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பின் என்னுடைய மேலாளர் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை வைத்து நற்பணி மன்றம் சார்பாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யலாம் என்று சொன்னதால் அதற்கு நான் சம்மதித்தேன்.


படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ். ஸ்ரீபதி எழுத இருந்தார். என் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களும் கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் என்னுடைய கதையை மிகையில்லாமல் அப்படியே இந்த படம் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் இலங்கை வந்து தங்கியிருந்து இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதினார். இதற்கிடையில் இந்தப் படத்தை இயக்கவிருந்த வெங்கட் பிரபுவிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதியே இயக்க முடிவு செய்தோம். பின் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருந்து, பின் அவரும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கின” என்று அவர் பேசினார்


என்னுடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய படத்துக்கும் போராட்டங்களே..


”திருச்சிக்கு அருகில் ஒரு சின்ன ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அங்கிருந்துதான் நாங்கள் இலங்கையில் குடிபெயர்ந்தோம். என்னுடைய வயதுக்கு நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படமும் ஐந்து ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுவிட்டது.


இதை எல்லாம் கடந்து இன்று இந்தப் படம் உருவாகி வெளியாகிறது என்றால் அதற்கு காரணம் இந்தப் படத்தை எப்படியாவது எடுத்து முடிக்கவேண்டும் என்று உழைப்பை செலுத்திய அனைவரும்தான். அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் பேசினார்.