CWC 2023 Trophy: 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருந்தாலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தயாராவதை விட போட்டிகளைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டு கிரிக்கெட் வாரியமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு ரசிகர்களை உலககோப்பை தொடர் குறித்து முணுமுணுக்க வைத்துக்கொண்டே உள்ளனர்.
ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது, இதையடுத்து பிசிசிஐ இம்முறை உலகக்கோப்பை போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ள 12 மைதானங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் மேம்பாட்டு செலவிற்காக ஒதுக்கியது. இதற்கான பணிகள் 12 மைதானங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
இதனால் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் தொடங்கி ஆசியக்கோப்பை முடியும் வரை அதாவது உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடரும் வரை இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டுகள் நடத்துவதை பிசிசிஐ தவிர்த்தது. மேலும், உள்ளூர் போட்டிகளை மற்ற மைதானங்களில் நடத்தவும் பரிந்துரைத்தது. உலகக் கோப்பை தொடருக்கு இம்முறை மொத்தம் 10 நாடுகள் களமிறங்குகின்றன.
ஐசிசி தரப்பில் உலகக்கோப்பை தொடரை கிரிக்கெட் இன்னும் பிரபலமாகாத மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடரில் ரசிகர்களாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடனும் மேலும், அந்த நாடுகளையும் கிரிக்கெட் விளையாடத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஃப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபில் டவர் முன்னிலையில் உலகக்கோப்பையை அறிமுகம் செய்தது. இதில் இந்திய திரைப் பிரபலங்களைக் கொண்டு ஐசிசி இந்த நிகழ்வை நடத்தியது. இதில் நடிகை மீனா மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோரை கொண்டு பாரீஸில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊர்வசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உலகக்கோப்பையை அறிமுகம் செய்து வைத்த முதல் நடிகை என்ற பெருமையை வழங்கிய ஐசிசிக்கு மிக்க நன்றி எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் இன்று அதாவது ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடிகை மீனா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “உலகக்கோப்பையை அறிமுகம் செய்து வைத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை வழங்கிய ஐசிசிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவரின் பதிவிலும் உலகக்கோப்பையை பிரான்சில் அறிமுகம் செய்த முதல் நடிகை என குறிப்பிட்டுள்ளதால் இணையத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.