நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி (Coolie) திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் மாஸாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் படக்குழு இந்த அப்டேட் உடன் பகிர்ந்துள்ளது.
ரஜினிகாந்த் ஃபோட்டோவுடன் மாஸ் அப்டேட்!
தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் (Rajinikanth) முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள கூலி படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. மிஸ்டர் பாரத் திரைப்படத்துக்குப் பிறகு சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார்.
மேலும் முன்னதாக இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளால் ஒருபுறம் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க, இந்த வீடியோவில் இடம்பெற்ற இளையாஜா இசையமைத்த டிஸ்கோ பாடலால் சர்ச்சை வெடித்தது. தன்னிடம் அனுமதி பெறாமல் தனது இப்பாடல் வீடியோவில் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப, அதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்தது. பின் இவ்விவகாரம் இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்னை என ரஜினி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு இவ்விவகாரம் ஒரு வழியாக ஓய்ந்தது.
இந்நிலையில் இன்று கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினைப் பகிர்ந்துள்ளது.
ஷூட்டிங்கில் இணைந்த ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் கூலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது தான் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் தான் கலந்துகொண்டுள்ளதை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இவர்கள் தவிர கூலி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜின் வழக்கமான பாணியில் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் இடம்பெறும் என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், கூலி முதற்கட்ட ஷூட்டிங் சுமார் ஒரு மாத காலம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூலி படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளும் நிலையில், ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளையும், அன்பறிவு சண்டைக் காட்சிகளையும் அமைக்கின்றனர். வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக கூலி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.