நடிகனாக வேண்டும் என்ற பெருங்கனவுடன், கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்த நடிகர் அஸ்வினுக்கு முதல் படமே சர்ச்சைக்கு வித்திட்டு விட்டது. தனது முதல் படமான  ‘என்ன சொல்லப்போகிறாய்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில்,  “எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு.. எனக்கு கதை பிடிக்கலானா தூங்கிருவேன். நான் இத பெருமைக்காக சொல்லல.. 40 கதை கேட்டேன்.. 40 கதையிலும் நான் தூங்கிட்டேன்” என்று பேசினார்.


 






அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் அவர் பேசிய வீடியோ எடிட் செய்து ட்ரோல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் அஸ்வின் நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் என்னுடைய முதல் படம் என்பதால் அங்கு நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அதனால் அங்கு நின்று என்ன பேசுவது என்று தெரியவில்லை என்று பேசினார்.


இந்த நிலையில் அந்த விவகாரம் குறித்து அவர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ இது எனக்கு நம்ப முடியாத தருணம். இன்னும் அந்த குரல்களை என்னால் கேட்க முடிகிறது. உண்மையில் அது அபரிவிதமான அன்பு” என்று பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும், கலாய்த்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக அஸ்வின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், என்ன சொல்லப்போகிறாய் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.