தமிழ் , தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோவிலும் கலக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் 1970-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் . தனது 14-வது வயதில் அதாவது 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் காம்போவில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் , ரஜினியின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருந்தார். குறைந்த நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் ரம்யா கிருஷ்ணன் பலரின் மனதில் பதிந்தார். அதன் பிறகு 'ஜல்லிக்கட்டு', 'முதல் வசந்தம்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'வானமே எல்லை' என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமா இவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதன் பிறகு படையப்பா, பஞ்ச தந்திரம் , பாகுபலி என தமிழ் படங்களிலும் அவ்வபோது தலைக்காட்டினார் ரம்யா . தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
தெய்வீக படம் என்றாலே ரம்யா கிருஷ்ணன்தான் என ஒரு காலக்கட்டத்தில் புகழ்பெற்றார். அம்மனாக அசத்திய ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக மிரட்டியதை யாராலும் மறக்க முடியாதுதானே. கடந்த 2003 ஆம் ஆண்டும் பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இந்த தம்பதியருக்கு தற்போது 17 வயதாகும் ரித்விக் என்ற மகன் உள்ளார். ரித்விக்கிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ரம்யா கிருஷ்ணன் ஒருபோதும் பகிர்ந்ததில்லை. இந்நிலையிரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.பலரும் என்னது ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ஆச்சர்யமாக கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ரம்யா கிருஷ்ணன் , பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் நினைவுகூறத்தக்கது.