மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஷ்வின் சரவணன். 2015 ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் தனது முதல் படத்தில் பெண்களை மையப்படுத்திய கதையின் மூலம் வெற்றி பெற்றவர். இந்த படம் தான் நடிகை நயன்தாராவும் ஒரு ஹீரோயினை மையமாக வைத்து நடித்த முதல் படம் அதுவாகும். இரண்டாவது முறையாக இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் நயன்தாரா இணைந்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'. 


எதையும் யோசிப்பதில்லை :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் 'கனெக்ட்' திரைப்படம் குறித்த  சில சுவாரஸ்யமான தகவல்களை சரவணன் பகிர்ந்துள்ளார். " நான் படம் எடுக்க துவங்கும் போது எனது முந்தைய படங்களுக்கு பொருத்தமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு பொருத்தமாக அமையுமா என்பதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. எனது உள்ளுணர்விற்கு ஏற்றபடியே நான் படத்தை நகர்த்துவேன்.


இந்த படத்தின் கதை பற்றி நான் நயன்தாராவிடம் கூறியவுடன் அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். என்னுடைய மற்ற படங்களை விடவும் பிரமாண்டமாக இருக்கும் என்று யோசித்து எல்லாம் இதை தொடங்கவில்லை. படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் விஷயங்களை பற்றி மட்டுமே யோசித்தேன். கொரோனா லாக்டவுன் சமயத்தில் நான் அனுபவித்த சில விஷயங்களை இந்த திரைப்படத்தில் சேர்த்துள்ளேன்" என்றார் அஷ்வின். 



கிரியேட்டிவிட்டி தான் முக்கியம் :
 
மேலும் அவர் கூறுகையில் " எந்த ஒரு அழுத்தமும் எடுத்து கொள்ளாமல் ஒவ்வொரு படத்தையும் புதிய படம் போலவே நினைத்து அதை எப்படி சுவாரஸ்யமாக, கிரியேட்டிவாக உருவாக்குவது என்பதை மட்டுமே ஆராய்ந்து செய்வது தான் பெரிய சவால். மேலும் நான் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என யோசிப்பதில்லை. என்னுடைய கதைக்கு பொருந்த கூடிய வகையில் மட்டுமே முடிவு செய்கிறேன்.


லாக்டவுன் சமயத்தில் எதிர்காலத்தை பற்றியும், அந்த நிலைமையில் எனக்கு இருந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையையும் உணர்ச்சிகளையும் நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைத்தேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்த தகுந்த ஜானர் திகில் திரைப்படங்கள் என்பதை உணர்ந்ததால் தான் இப்படத்தை உருவாக்கினேன் என அவர் கூறியுள்ளார்.  







அனுபவசாலிகள் என்னுடன் கூட்டணி :


கனெக்ட் திரைப்படத்தில் அனுபவமிக்க நடிகர்களான அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்தது ஒரு பெரிய பாக்கியமாக இருந்தது. திகில் திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். மாயா திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவை முதலில் சந்தித்தபோது எனது அனுபவம் குறித்து கேட்கவில்லை. படத்தின் கதையை கேட்ட பின்னர் உடனே ஒத்துக்கொண்டார். முதலில் நான் நயன்தாரா மாயா படத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என நினைத்தேன் ஆனால் அதற்கு மாறாக அவர் ஒத்துக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார். நீங்கள்  யாரு என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை கொள்ள தேவை இல்லை. படத்தின் ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் அதை விரும்புவார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்" என்றார் அஷ்வின் சரவணன். 
 


நயனோடு இரண்டாவது படம் :


நடிகை நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. மிகவும் ஒத்துழைப்போடும், அக்கறையோடும் நடித்து கொடுத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவர வைக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்ததற்கான காரணம் என்றார் இயக்குனர் அஷ்வின்  சரவணன். இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.