இயக்குநர் ஹரியின் “ரத்னம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலினத்துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் பதிவு செய்துள்ளார். 


தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்குவதில் வல்லவர் ஹரி. இவர் விஷாலை வைத்து முன்னதாக தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன், சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் விஷால் ஒருவர் தலையை வெட்டி கையை வெட்டி வைத்திருப்பது போல இடம் பெற்றிருந்தது. 


இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலினத்துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையில், “என்னமோ மார்க்கெட்டிற்கு போய் சாதாரணமாக கீரை கட்டு  வாங்கி வருவதுபோல , கழுத்தை அறுத்து   கொல்லப்பட்ட மனிதத் தலையை ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கையிலும் இன்னொரு கையில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடனும்  உடம்பு , உடை முழுவது ரத்த சகதியாக    வெறிபிடித்த  மனிதன் நிற்பதுபோல் நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் என்ற பெயரில் ஒரு சினிமா விளம்பரம்  தினசரி ஏடுகளில் முழு பக்கத்தில் மட்டுமல்லாது சென்னை நகர் முழுவதும் சுவரொட்டியாக  ஒட்டப்பட்டுள்ளது.


இதைப் பார்க்கும் சாமானியர் மனநிலை நிச்சயமாக ஒரு நிமிடம் பகீர்  என்றுதான் துடித்திருக்கும். இவ்வளவு அதீத வன்முறையை உள்ளடக்கமாக வைத்து செய்த சினிமா விளம்பரம் தேவைதானா ? எதிலும் ஒரு வரைமுறை வேண்டாமா? நெகட்டிவ் விஷயங்களை டக்கென்று உள்வாங்கிக்கொள்ளும் இளைய சமுதாயத்தினர் இதை எப்படி அணுகுவார்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டாமா?  நடிகர்கள் புகைப்பிடித்தாலே அந்த புகைப்படங்களை விளம்பரங்களில்  தடை செய்ய வேண்டும் குரல் வலுத்துவரும்  நேரத்தில் அதைவிட மோசமாக இளம் வயதினரை எளிதில் ஆட்கொள்ளும் இதுபோன்ற துப்பாக்கி, கத்தி, அருவாள், கோடாரி ரத்தம் என   விளம்பரங்களை எப்படி ஏற்க முடியும்?


சமீபத்தில்  தமிழக டி.ஜி.பி. திரு. சங்கர் ஜிவால் அவர்கள்  சிறார்களுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்த மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், யுனிசெப் அதிகாரிகள், பேராசிரியர்கள் முன்னிலையில் ' கொலை உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சமூகம் ஒதுக்கி வைக்கிறது இதை மாற்ற வேண்டும்,அரசு அமைப்பு மட்டுமல்லாமல் சமூக அமைப்புகளும்  இவர்களுக்காக செயல்படவேண்டும்,அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்,தக்க மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் சமூக அமைப்புகள், நீதித்துறை உட்பட அனைவரும் இணைந்து குற்றங்களை தடுக்க விவாதிப்பது அவசியம்.


என்றும் நாளைய இளைஞர்களின் நலன் கருதி ஆக்கப்பூர்வமான அருமையான யோசனைகளை  டி.ஜி.பி. திரு. சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார். இந்நிலையில்தான்  அதே  சிறார் மற்றும் இளைஞர்களின் மனதில் விஷத்தை ஏற்றுவதுபோல்  வன்முறையின் உச்சமாக மேற்கண்ட திரைப்பட விளம்பரம் வெளி வந்துள்ளதையும் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல் திரைத்துறையினருக்கும் பொறுப்பு உள்ளது என்று கருதுகிறேன் .பொது வெளியில் இது போன்ற சமூகப்  பொறுப்பற்றத் தன்மையில் வெளியாகும் விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் , திரைப்படங்களுக்கு உள்ளது போல் அவசியம் ஏற்படின் விளம்பரங்களுக்கும் தணிக்கை முறை கொண்டு வரவேண்டும் என்றும் அரசு  சிறப்பு கவனம் செலுத்தி, அடுத்துவரும் இளைய தலைமுறையினரின் நலனை மனதிற்கொண்டு வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.