இயக்குனர் வெங்கட் பிரபு, கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியான நிலையில் அப்படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி இப்படம் பான் இந்தியா படமாக ஆக்‌ஷன் ஜானரில் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய் உடன் இணைந்து தளபதி 68 படத்தை இயக்க உள்ள நிலையில், லியோ திரைப்படம் ரிலீசான பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் படபிடிப்பு  முடிந்த பின்பு தான், கிச்சா சுதீப்பின் படம் தொடங்கும் என்பதால், அப்படம் கிச்சா 47 அல்லது 48 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. கிச்சா 46 கலைப்புலி தானு தயாரிப்பில் உருவாக உள்ளதாக கடந்த மே 24ஆம் தேதி தகவல் வெளியானது. 


‘நான் ஈ’, படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ராந்த் ரோணா’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை தாணு தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ விடியோ அண்மையில் வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தானு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.இப்படத்திற்கு காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


முன்னதாக கிச்சா சுதீப் அளித்த பேட்டி ஒன்றில், "நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் என்னுடைய சொந்த மாநிலத்திலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தே எனக்கு வருகின்றன. பாலிவுட்டிலிருந்து வருபவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. அவை எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தாலே தவிர அவற்றின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்ல. என்னுடைய அடுத்த படத்தை ‘மங்காத்தா’ மற்றும் ‘மாநாடு’ படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அவர் ஒரு புத்திசாலித்தனமான இயக்குநர். அவரோட பணிபுரிய நான் ஆவலாக இருக்கிறேன்" இவ்வாறு சுதீப் கூறியிருந்தார்.


மேலும் படிக்க 


Kalaignar Womens Assistance Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


நான் டயர்டும் ஆகல ரிட்டயர்டும் ஆகல: அஜித் பவார் விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி