உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ’கம்பெனி’ திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மகானந்தா சினிமா சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்து, எஸ்.தங்கராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் கோலிசோடா பாண்டி, முருகேசன், டெரிஷ்குமார், பிரித்திவிராஜ், வலினா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனி படம் குறித்து அதன் இயக்குனர் எஸ் தங்கராஜன் கூறியதாவது,




பொதுவாகவே எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடக்கூடும். அப்படி ஒரு எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தில் சிக்கும் 4 இளைஞர்கள் பற்றிய கதை தான் கம்பெனி. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி உன்னத நிலைக்கு வரும் ஒரு தருணத்தில் திடீரென நடக்கும் ஒரு சம்பவம் அந்த இளைஞர்களின் வாழ்க்கையை திசை திருப்பி விடுகிறது. இடியாப்ப சிக்கல் போன்று பிரச்சனைகளை சந்திக்கும் அவர்கள், அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டார்களா, இல்லையா? என்பதுதான் கதைக்களம்.




இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சொல்லலாம். எப்போதுமே படத்தின் டிரெய்லர் தான் வேக வேகமாக நகரும். ஆனால் இந்த படம் முழுவதுமே ட்ரெய்லர் வேகத்தில் செல்லும். அந்த அளவு இந்த படம் முழுவதும் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.




எல்லாவற்றையும் விட இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படைப்பு. இதற்காகவே கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. காட்சிகள் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளது. திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த எதார்த்தத்தை அழகாக உணர முடியும்.




படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பட குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் இந்த படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. வித்தியாசமான கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். அதே வேலை அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யக்கூடிய படமாகவும் இது நிச்சயம் இருக்கும். ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என இயக்குனர் எஸ்.தங்கராஜன் கூறினார்.


இப்படம் கரூரில் 40 நாட்கள் எடுக்கப்பட்டது. கரூரில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரின் முக்கிய தொழிலான பஸ் பாடி செய்யும் தொழிலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.