தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக காமெடி நாயகனாக கோலோச்சி வருபவர் வடிவேலு. 2000ஸ் காலங்களில் கோலிவுட்டிற்குள் நுழைந்த இவர், தனது உடல் மொழியாலும், வசனங்களினாலும் மக்களை ஈர்த்தவர். இவரது வசனங்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லை, இவரைப் பிடிக்காத குழந்தைகளும் இல்லை. ஆதித்யா, சிரிப்பொலி போன்ற நகைச்சுவை சேனல்களில் இவரது நகைச்சுவை காட்சிகள் ஒலிபரப்பான காலம் என்றோ மலையேறிவிட்டது. இன்று ஆன்ட்ராய்டு முதல், ஐஃபோன் வரை எங்கு திரும்பினாலும், சமூக வலைதளம் எல்லாம் இவர் முகம்தான். கிடைப்பதையெல்லாம் கன்டென்டாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைத்து, மீம் க்ரியேட்டராக உலா வரும் அனைவருக்கும் முகமே இவர்தான். வடிவேலுவின் முகம் இல்லையென்றால், மீம்ஸ்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு டெம்ப்ளேட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து காமெடி ரோலில் நடித்து வந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், இரண்டு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. நகைச்சுவை-புராண கால கதையம்சம் என கலவையாக ரசிகர்கள் முன் வைக்கப்பட்ட இப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் வடிவேலு என்றால், அது மிகையாகாது.