பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு வழங்கிய ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் பீகார் மாநில ஆளுநர் பாகு செளவுஹான் உள்ளிட்டோரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் தர்பங்கா (Darbhanga.) மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் (Lalit Narayan Mithila University ) கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான ஹால்டிக்கெட் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் சில மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்களை டவுன்லோட் செய்து பார்த்தபோது அதில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேரந்திர சிங் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு செளவுஹான் ஆகியோரின் புகைப்படங்களுடன் இருந்திருக்கிறது. மாணவர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக பிரபலங்களின் புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


இந்த விவகாரம் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு சென்றது. இது தொடர்பாக, பல்கலைக்கழக  பதிவாளர் முஷ்தாக் அகமது (Mushtaq Ahmed) விளக்கம் அளித்துள்ளார். 


 "இந்த விஷய்ம் குறித்து சமூக வலைதளத்தில் பெரிதாக பேசப்பட்டதை அறிவோம். இது தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டிற்கு புகைப்படங்களை மாணவர்கள் தான் அப்லோட் செய்வார்கள். அதை சரிபார்த்து நிர்வாகம் ஹால்டிக்கெட் வழங்கும். இதில் சில  மாணவர்கள் பிரபலங்களின் புகைப்படங்களை விளையாட்டுத்தனமாக அப்லோட் செய்திருக்கலாம் என்பது தெரிகிறது.  அதனால், ஹால்டிக்கெட்டில் புகைப்படங்கள் மாறி உள்ளன. இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்று.  உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக தேவையெனில் வழக்கு பதிவு செய்வது குறித்தும் முடிவு எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் பிரதமர், மாநில ஆளுநர் உள்ளிட்டோரின் பெயரும் இருக்கிறது. இது பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்து என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போலவே இரண்டு ஆண்டுகளுக்கு முன், முசாபர்பூரில் உள்ள கல்லூரியில் நடிகர் இம்ரான் ஹாச்மி, நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தது குறிப்பிடத்தக்கது.