சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதும், கிடைத்த வாய்ப்புகள் தக்க வைக்கப்படுவதும் தவ வாழ்க்கையை போன்றது என்பார்கள். அதில் சிலர் இமயம் தொடுவதுண்டு; பலர் அடிவாரத்தில் அழுவதுண்டு. நிறைய பேர், தன் தவறுகளிலிருந்து பாடம் கற்று, அதில் மீண்டதும் உண்டு. அப்படி ஒரு தவறை தான் செய்ததாகவும், பின்னர் அதிலிருந்து மீண்டதாகவும் கூறுகிறார் பிரபல காமெடி நடிகர் சாம்ஸ். ராதா மோகன், எழில் படங்களில் மட்டுமே பார்த்து வந்த சாம்ஸ், இப்போது, சரளமாக அனைத்து திரைகளிலும் வருகிறார். நல்ல முன்னேற்றம்; எப்படி நடந்தது இது... சினி உலகம் இணையத்திற்கு அவர் அளித்த பேட்டி இதோ:

 

 

‛‛எனக்கு பிடிச்சு தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் வாய்ப்புக்கு அழைய வேண்டும் என்று தெரிந்து தான் இங்கு வந்தேன். எல்லா துறையிலும் கஷ்டம் இருக்கத்தான் இருக்கிறது. அதனால், சினிமாவில்  மட்டும் தான் போராட்டம் இருப்பதாக கூறமாட்டேன். எனக்கு முன் பயணத்தை தொடங்கியவர்கள், இன்னும் என்னை விட கீழே இருக்கிறார்கள்.அவர்களை பார்த்து நான் மகிழ்ந்து கொள்ளவும் இல்லை. எனக்கு பின்னால் பயணத்தை தொடங்கி, என்னை விட உயர்ந்து சென்றவர்களை கண்டு கவலைப்படவும் இல்லை. 10 இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டால் தான் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஜெயிச்சால் தான் கொண்டாடுவார்கள். நல்ல புகழ் கிடைக்குது, நல்ல பணம் வருது, எனக்கு நடிக்க பிடிச்சிருக்கு; அதனால், சிரமங்களை பார்க்காமல் இந்த துறைக்குள் வந்தேன். உன் நிலை உனக்கு தெரிந்துவிட்டால், மற்றவர்களை பார்த்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். அவன் மாதிரி நான் மாற வேண்டும் என்றால், அவனை மாதிரி உழைத்தால் அது கிடைத்துவிடும். நல்லதோ, கெட்டதோ அது நம் கையில் தான். எண்ணம் போல வாழ்வு. என்ன நினைக்கிறோமோ அது நமக்கு கிடைக்கும். 


என் நிலைக்கு நான் தான் காரணம். பயணம் படம் வெற்றி பெற்றதும், எனக்கு நிறைய பாராட்டு வந்தது. நம்மை அழைக்க வருவார்கள் என்று வீட்டில் உட்கார்ந்துவிட்டேன். ஆனால், நான் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல இயக்குனர்களை தேடிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், நான் தானாக வாய்ப்பு வரும் என வீட்டில் இருந்துவிட்டேன். அது பெரிய தவறு. அதை நான் செய்யாமல் இருந்திருந்தால் வாய்ப்புகள் கொட்டிக் கிடைத்திருக்கும். நல்ல இயக்குனர்களை நான் சந்தித்து, என்னை நான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பு கொடுங்கள், பணம் பெரிதல்ல என நான் கூறியிருக்க வேண்டும். நான் அதை செய்யவில்லை. எனக்கு என்ன  திறமை இருந்தாலும், அதை நான் மார்க்கெட் செய்திருக்க வேண்டும். அதை நான் செய்யவில்லை. அதை நான் செய்யத்தவறியது தான், என் வளர்ச்சி தடை பட காரணம். என்னுடைய தவறுகள் தான் என் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. இப்போது வருத்தப்பட்டு என்ன செய்வது; இனியாவது வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைப்பதை அனுபவிக்க வேண்டும்.  அது தான் புத்திசாலித்தனம். அதை தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்,’’ என அந்த பேட்டியில் சாம்ஸ் கூறியுள்ளார்.