இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை... ‛உடல் எடையை எப்படி குறைப்பது?’ என்பது தான். வாயை கட்ட முடியவில்லை; உடற்பயிற்சிக்கு சென்றால் அதை தொடர முடியவில்லை. ஏதாவது டயட் எடுக்கலாம் என்றால் மனம் ஒத்துழைக்கவில்லை, என பல குறைகளோடு கடக்கிறது. அவ்வப்போது சில செலிபிரிட்டிகள் யாராவது உடலை குறைக்கும் போது, அவர்கள் சொல்லும் டிப்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெறும். நாம் பார்க்கப் போவதும் அது மாதிரியான ஒருவர் தான். காமெடி நடிகர் பால சரவணன்.
விஜய் டிவியின் கனா காணும் காலங்களில் அறிமுகம் ஆனவர். அதன் பின் தமிழ் சினிமாவில் காமெடி படலத்தை தொடங்கியவர். 2013 ல் குட்டிப்புலி படத்தில் பப்பு கதாபாத்திரத்தில் நடித்த பால சரவணன் கதாபாத்திரம், பலரையும் கவர்ந்தது. அதன் பின் வாய்ப்புகளும் குவிந்தன.
ஈகோ, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், கோ 2, அதே கண்கள், ஹரஹர மகாதேவகி, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், தண்ணி வண்டி என இன்னும் எக்கச்சக்க படங்களில் படையெடுத்தார் பால சரவணன். அவரின் உடல் தோற்றமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கட்டையா, குட்டையா என்பார்களே... அது மாதிரியான தோற்றம். அது அவரது காமெடிக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் தான் லாக்டவுன் பலரின் மனதை மாற்றியதைப் போல, பால சரவணன் மனதையும் மாற்றியது.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். அதற்கான தீவிர பயிற்சியையும் மேற்கொண்டார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஒன்றல்ல இரண்டல்ல 22 கிலோ குறைத்து, காமெடி நடிகர் தற்போது ஹீரோ நடிகரைப் போல காட்சியளிக்கிறார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தை பதிவு செய்துள்ள பால சரவணன், 2019 ல் இருந்த தனது படத்துடன் ஒப்பிட்டுள்ளார். 22 கிலோ குறைக்க காரணமான மித்ரனுக்கு நன்றியும் அதில் கூறியுள்ளார்.
இதுவரை பிரச்சனை இல்லை... ஆனால், அந்த பதிவில் வந்து பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், பதிவு செய்த கமெண்ட் பலரின் கவனத்தை பெற்றது.
‛‛Bro., கூடிய சீக்கிரம் உங்களுக்கே தெரியாம உங்கள ஒரு hindi ad ல போடப்போறாங்க.. "Hi.. Iam Pranav metra.. I proud to says i loss 30 kgs in 3 months.. My BMI was 38.. Now first time in my life its going to 28.5.. ’’
என்று உடல் எடை குறைப்பு விளம்பரம் குறித்து கிண்டலடித்து பதிவிட்டார். அதற்கு பால சரவணனே சிரித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், இதுவரை தனது உடல் எடை குறைய காரணம் என்ன என்பதை பாலசரவணன் கூறவில்லை. ஆனால், அவர் அதை மறைக்கவும் இல்லை. விரைவில் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்