Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு  சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இந்தச் சூழலில் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து, TTF வாசன் உடன் இணைந்து அதிவேகமாக பைக் பயணம் மேற்கொண்டுள்ள வீடியோ கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 


இந்நிலையில் TTF வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக, D3 போத்தனூர் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது. 


இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


இவர் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு காவல்துறை எச்சரிக்கை செய்தது அதையும் மீறி இதுபோல அதிவேகத்தை பைக்குகளை இயக்கி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கிறார் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு? இன்ஸ்டாவில் 2 மாசமா ஆளக்காணோம்..! வெளியான தகவல் இதுதான்!