சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளனர். அவர் படங்களை தாண்டி, தனது இசைக் கச்சேரிகளை உலகமெங்கும் நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீரும் அளவுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடப்பார்கள். அப்படியான நிலையில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார். அதன்படி 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசைக் கச்சேரி நடைபெற இருந்தது. 


இதற்கான டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.  ரசிகர்களும் ஆவலுடன் மதியம் முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வர தொடங்கினர். இதனால் பனையூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மதிய நேரத்தில் திடீரென வானிலை மாறி மழை கொட்ட தொடங்கியது. இதனால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் ஒரே நேரத்தில் பனையூரில் இருந்து தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பியதால் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. 






இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து சோகத்துடன் பதிவிட்ட ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆறுதல் கூறினார். தொடர்ந்து, “மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி . புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். 


அப்போது ‘சென்னையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரிய இசை கச்சேரிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை  நடத்துவதற்கு ஏதுவாக  கிழக்கு கடற்கரை சாலையில் ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’ உலகத்தரத்தில் விரைவில் அமையவுள்ளது. சென்னை நகரத்தில் புதிய கலாச்சார அடையாளமாக ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’விளங்கும் என தெரிவித்துள்ளார்.