சந்தோஷ் சிவன்


கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் சிவன் (Santhosh Sivan) இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். மணித்னம் இயக்கிய ரோஜா, தளபதி, உயிரே, இருவர், ராவணன், செக்கச் சிவந்த வானம்  உள்ளிட்டப் படங்களிலும், முருகதாஸ் இயக்கி விஜய் நடித்த துப்பாக்கி, ரஜினிகாந்த் நடித்த தர்பார், சூர்யா நடித்த அஞ்சான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.


ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் அசோகா, மல்லி, உருமி, இனம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 12 தேசிய விருதுகளையும், 4 கேரள மாநில அரசு விருதுகளையும், 3 தமிழ்நாடு  மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார் சந்தோஷ் சிவன். சந்தோஷ் சிவனின் பணியை கெளரவிக்கும் விதமாக அவருக்கு கான் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பியர் அசிங்யு விருது கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.


இப்படியான நிலையில் பிரான்சில் கடந்த மே 14 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி ஆகிய தேதிகளில் கான் திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சந்தோஷ் சிவனுக்கு பியர் அசிங்யு விருது வழங்கப்பட்டது. 


பியர் அசிங்யு விருது வென்ற முதல் இந்தியர்






உலக அளவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான வில்மோஸ் சிக்மண்ட், ஃபிலிப் ரூஸேலோட், ராஜர் டீக்கின்ஸ், கிறிஸ்டோஃபர் டாய்ல் உள்ளிட்ட பலர் இந்த விருதினை வென்றுள்ளார்கள். இப்படியான நிலையில் இந்த ஆண்டு இந்த விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமைக்கு உரியவராகிறார் சந்தோஷ் சிவன். அவருக்கு தமிழ் திரையுலகினர் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். 


கிராண்ட் ப்ரிக்ஸ் விருது வென்ற பாயல் கபாடியா


கூடுதலாக இந்திய இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' படத்திற்கு கிராண்ட் ப்ரிக்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா சார்பாக  இந்தப் பிரிவில் தேர்வான ஒரே இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.