செங்கல்பட்டு மாவட்டம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (36). இவர் இதுவரை மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். சுதாகர் ஒவ்வொரு முறையும், பெண்களை திருமணம் செய்துவிட்டு , குழந்தைகளை கொடுத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதே , தொழிலாக  வைத்து வந்துள்ளார்.‌


அதேபோன்று எந்தவித வேலைக்கும் முறையாக செல்லாமல், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது அவற்றை வைத்து ஜாலியாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சுதாகர் மீது செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


 தென் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள்


இந்நிலையில் சுதாகர் அவரது  அக்கா வீட்டில், காஞ்சிபுரம் நாகலத்து மேடு பகுதியில் தங்கி வசித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலையம் உட்பட்ட ஏகனாம்பேட்டை  பகுதிக்கு சுதாகர் அவ்வப்பொழுது சென்று வந்துள்ளார். அப்பொழுது ஏகனாம்பேட்டை பகுதியில் , வாலாஜாபாத் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் புதியதாக வந்ததை பார்த்துள்ளார். 


 ஃபோன்களை திருடிய சுதாகர்


அந்தப்பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு வந்த சுதாகர், அந்த பெண்கள் இரவு ஒரு மணி வரை தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதையும் கவனித்து வந்துள்ளார்.‌ அதேபோன்று புதிதாக அங்கு வந்திருந்ததால் வீட்டில் ஃபேன் இல்லாததால் மொட்டை மாடியில் இரவில் தங்குவதை, பெண்கள் வழக்கமாக வைத்து வந்துள்ளனர். இதை சுதாகர் நோட்டமிட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவில் பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தபொழுது காலை 3 மணி அளவில், ஐபோன் உள்ளிட்ட  விலை உயர்ந்த மூன்று பொருட்களை தூக்கிச் சென்றுள்ளார். 


வீட்டில் பெரிய பிரச்சினை


காலை எழுந்து பார்த்த பிறகு அங்கு செல்போன் இல்லாததை கண்டு மூன்று பெண்களும் அதிர்ச்சி அடைந்தனர். யாரோ வீட்டிற்கு வந்து செல்போனை திருடி சென்றிருப்பது உறுதி செய்தனர். தொடர்ந்து வீட்டின் அருகே இருந்த டீக்கடைக்கு சென்று செல்போன் திருட்டை பற்றி கூறியுள்ளார்கள். அவர்களும் தங்களது செல்போனை கொடுத்து செல்போன் எண்ணுக்கு முயற்சி செய்து பார்க்கக் கூறியுள்ளனர்.  அப்பொழுது மறுமுனையில் செல்போனை எடுத்த நபர் அந்தப் பெண்களிடம் பேசத் தொடங்கியுள்ளார்.


செல்போனை திருடிக் கொண்டு அந்த பெண்களிடம் அளவுக்கு மீறி பேச்சை வளர்த்து உள்ளார் சுதாகர். பெண்களும் தங்கள் வீட்டில் இருப்பவர்கள் போன், மூலம் தான் தொடர்பு கொள்வார்கள், நாங்கள் போன் எடுக்கவில்லை என்றால் வீட்டில் பெரிய பிரச்னையாகிவிடும் என எடுத்துக் கோரியும் சுதாகர் அவர்களை தங்கள் வலையில் விழுத்தும் வண்ணம் பேசி வந்துள்ளான் .


 சாமர்த்தியமாக பேசிய பெண்கள்


அருகில் இருந்தவர்கள் அவன் வழியிலே சென்று சுதாகரை மடக்கி பிடிக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கி தைரியம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பெண்கள் சுதாகர் பேசுவதற்கு ஏற்ப நைசாக பேசி, சுதாகர் சொல்வதற்கெல்லாம் இணக்கமாக செல்வதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். செல்போன் வேண்டுமென்றால் என்னிடம் "அட்ஜெஸ்ட்மென்ட்" செய்ய வேண்டும் எனவும் நேரடியாக பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து, அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் நபரை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 


கவனித்து அனுப்பிய ஊர் மக்கள்


பெண்களும் நைசாக பேசியதால் எப்படியும் தனக்கு காரியம் சாதித்து விடலாம் என நம்பி சுதாகர் வந்த பொழுது அங்கிருந்து இளைஞர்கள் சுதாகரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அங்கு தப்பி சென்ற பொழுது சுதாகரை அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் சுதாகரை மீட்டு அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து அவர் மீது ஆபாசமாக பேசுதல், திருட்டு, மிரட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.‌ திருடனை அவன் வழியிலே சென்று மூன்று பெண்கள் நைசாக பேசி வரவழைத்து தங்களது செல்போன்களை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பேசு பொருள் ஆகியுள்ளது.