திரைக்கதை , நடிப்பு மட்டுமில்லாமல்  நடனம் , பாடகர், ஒப்பனை, என சினிமா தொடர்பான பல பிரிவுகளிலும் வைத்து பாராட்டும் வகையிலான வேலைகள் செய்திருக்கிறார் கமல்ஹாசன். தொழில் நுட்பரீதியாக கமல்ஹாசன் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சில முன்னோடியான விஷயங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாம்.


விக்ரம்




1986 ஆம் ஆண்டு  வெளியானத் திரைப்படம் விகரம். எழுத்தாளர் சுஜாதா மற்றும் கமல் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கினார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். விக்ரம் படத்தில் பலவிதமான புதிய தொழில்நுட்பங்கள் காட்டப்பட்டாலும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் முறையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் பட்டன இந்தப் படத்தின் சிறப்பு அம்சம்.


தேவர்மகன்




பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதியப் படம் தேவர் மகன். தமிழ் சினிமாவில் முதல் முறையாக திரைக்கதை எழுத ஒரு சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்ட படம் தேவர் மகன் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?


மஹாநதி




சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மஹாநதி திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்ட படங்களில் ஒன்று. இன்று படத்தொகுப்பிற்கு பயன்படுத்தப்படும் ஆவிட் என்கிற சாஃப்ட்வேர் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது மஹாநதி படத்தில்தான்.


குருதிப் புனல்




ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில் கமல் அர்ஜுன் நடித்த குருதிப் புனல் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. டால்பி சவுண்ட் டெக்னாலஜியை பயண்படுத்தி ஹாலிவுட்டில் பேட்மேன் படம் வெளியான அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் இந்த தொழில் நுட்பத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தினார் கமல்ஹாசன்.


இந்தியன் 




ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் வயதான முதியவராக கமல் நடித்திருதார். இந்த தோற்றத்தை வரவழைப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து திரைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ப்ராஸ்தெடிக் என்று சொல்லப்படும் செயற்கை முக அலங்காரத்தை இந்தப் படத்தில் முதல் முறையாக பயன்படுத்தினார் கமல்ஹாசன்.


விருமாண்டி




அகிரா குரோசோவாவின் ராஷோமோன் வகையிலான கதைசொல்லலை மையமாக வைத்து எடுக்கப் பட்ட விருமாண்டித் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் எதார்த்தமாக இருப்பதற்கு இந்தப் படத்தின் ஒலியமைப்பும் ஒரு காரணம். மற்ற படங்களுக்கு செய்வது போல் ஸ்டுவியோவில் டப்பிங் , பின் ஒளிச்சேர்க்கை இல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்புடன் சேர்ந்தபடியே ஒலிப்பதிவும் லைவாக நடைபெற்றது.


விஸ்வரூபம்




பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கமல்ஹாசன் இயக்கியத் திரைப்படம் விஸ்வரூபம். ஓடிடியில் வெளியாவதற்கு பலவருடங்கள் முன்பாகவே இந்தப் படத்தை திரையரங்கத்தில் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் கமலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல் முறையாக 3டி ஒலியமைப்பில் இந்தப் படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன்.


இந்தியன் 2




சமீபத்தில் வெளியாகிய இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் கமலை இளமையாக காட்ட டீ ஏஜிங் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருந்த நிலையில் பொருளாதார காரணங்களினால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது இந்தியன் 2 படத்தில் இந்த முயற்சி சாத்தியமாகி இருக்கிறது