வயநாடு நிலச்சரிவு குறித்து விஜய்:


 

கேரளத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் வயநாட்டில் நேற்று நள்ளிரவு 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச்சம்பவத்தால் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த  கோர சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய். 

 

மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தான் பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பதிவிட்டுள்ளார். 

 

கொடைக்கானலில் விஷ்ணு விஷால் :


தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகமான முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' மிக நல்ல வரவேற்பை பெற்று கொடுத்த ஒரு வெற்றிப்படம். அதை தொடர்ந்து ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் வெகு சிறப்பாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். 

 

சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'லால் சலாம்' படம் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது . தற்போது ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி என இரு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராம்குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து VV21 படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அங்கு எடுத்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் அவ்வப்போது சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகிறார். 

தனுஷுக்கு கார்த்தி ஆதரவு :


இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே இனி வரும் காலங்களில் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

 

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துடம் கலந்து ஆலோசித்த பிறகே நடிகர் தனுஷ் இனி புதிதாக படத்தில் நடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர் சங்கம் தனுஷின் நடிக்கும் படங்கள் தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுப்பது தவறானது. தனுஷ் மீது இதுவரையில் எந்த புகாரும் வந்ததில்லை என நடிகர் சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

'தக் லைஃப்' படத்தில் இணைந்த பிரபலங்கள்:


 

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறார்கள். திரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், சிம்பு உள்ளிட்டோர் ஏற்கனவே நடித்து வரும் சூழல் தற்போது மேலும் இரு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று வெளியானது. 

 

நடிகர் கமலுடன் பெரும்பாலான படத்தில் இணைந்து நடித்த நடிகர் நாசர் மற்றும் 'விருமாண்டி' படத்தில் கமல் ஜோடியாக நடித்த நடிகை அபிராமியும் இணைந்துள்ளனர். 'தக் லைஃப்' படத்தில் கமல்ஹாசன் மனைவியாக அபிராமி நடிக்க அவர்களின் மகனாக சிம்பு நடிக்கிறார் என கூறப்படுகிறது.