போதை பொரூள் வழக்கில் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ராமநபுரம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு நிர்வாகியான சய்யது என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.


கிளாம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்கள்


தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு தமிழ்நாட்டில் மிக தீவிரமாக போதை பொருள் ஒழிப்பில் இறங்கி பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் என்பவர்தான் தற்போது தென்னக போதை பொருள் தடுப்பு பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள போதை பொருட்கள் கண்டறியப்பட்டு தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.


இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி போல் நின்றிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்த அவர்கள், அவரிடமிருந்து 5 கிலோ மெத்தப்பட்டைன் என்ற போதை பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் சென்னை ரெட்டில்ஸ் பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. கடந்த 27ஆம் தேதி அங்கு சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவினர் 7 லட்ச ரூபாய் மதிப்புடைய மெத்தப்பட்டைன் போதை பொருளை கைப்பற்றினர்.


ராமநாதபுரம் வழியாக இலங்கை கடத்த திட்டம்


இந்த மெத்தப்பட்டைன் என்ற போதை பொருளை ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு அவர்கள் கடத்தவிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மூவரையும் கைது செய்துள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா ?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட சய்யது இப்ராஹிம் என்பவர் திமுகவை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி என்ற தகவல் வெளியானது. இது குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.


திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்


இந்நிலையில், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ராமநாதபுரம் மாவட்ட திமுக  சிறுபான்மையினர் நல  உரிமை பிரிவு துணை தலைவர் சய்யது இப்ராஹிம் என்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.


அறிவிப்பு வெளியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்


இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தததால், இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் செய்யாது இப்ராஹிம் என்பவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக வைக்கப்படுகிறார். இவரோடு, கழகத்தினர் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் அவரது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.