100 கோடி தொட்ட இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. சித்தார்த் , எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் , பாபி சிம்ஹா , விவேக் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். உலகளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகிய இந்தியன் 2 வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 25.6 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.  இரண்டாவது நாளில் 18.2 கோடியும். மூன்றாவது நாளில் 15.3 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் 109.15 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் உலகளவில் 105 கோடி வசூல் எடுத்திருந்த நிலையில் மூன்றே நாட்களில் மகாராஜா படத்தின் வசூலை முறியடித்து இந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக மாறியுள்ளது இந்தியன் 2. 


சிவகார்த்திகேயன் மகன் பெயர் சூட்டும் விழா


சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இந்த தம்பதிக்கு குகன் மற்றும் ஆராதனா என இரு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது தங்கள் குடும்பத்தில் இன்னொரு உறுப்பினரை வரவேற்றுள்ளார்கள். இன்று  உறவினர்கள் சூழ பூஜையுடன் குழந்தையை தொட்டிலில்போடும் விழாவும் பெயர் சூட்டும் விழாவும் நடந்தேறியுள்ளது. சிவகார்த்திகேயன் - ஆரத்தி தம்பதி தங்களுடைய மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளனர்.


இந்தியன் 2 பார்க்க இருக்கும் ரஜினிகாந்த்


ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது, அவர் கூறியதாவது, அம்பானி வீட்டு கடைசி கல்யாணம். ரொம்ப பிரம்மாண்டமாக செய்திருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தது. கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் இன்னும் பார்க்கவில்லை. நாளை பார்க்கிறேன்.” என்று கூறினார். இந்தியன் 2 படத்தைப் பார்த்தபின் ரஜினியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


சித்தார்த் 40


சித்தா திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முன்பாக எட்டுத் தோட்டாக்கள் , குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள ஸ்ரீ கணேஷ் தனது மூன்றாவது படமாக இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்த சக்தி டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சரத்குமார் , தேவயானி , மீதா ரகுநாத் , சைத்ரா அச்சார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று முடிந்தது.