சினிமாவில் 32 ஆண்டுகளை கடந்த அஜித்
நடிகர் அஜித் குமார் நடிகராக தனது பயணத்தைத் தொடங்க 32 ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் விதமாக அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களின் சிறப்பு அப்டேட்ஸ் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக விடாமுயற்சி படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் மாலை 5:32 மணிக்கு குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியாக இருக்கிறது.
தி கோட் படத்தின் மூன்றாவது பாடல்
விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படியான நிலையில் இன்று தி கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பெப்பியான பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. ராஜூ சுந்தரம் இப்பாடலுக்கு நடனம் கற்பித்துள்ளார்.
கேரள அரசுக்கு 3 கோடி வழங்கிய மோகன்லால்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சனிக்கிழமை அன்று மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. தற்போது வரை 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் துணையோடு பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு சென்று கள நிலவரத்தை மோகன்லால் தெரிந்துகொண்டார். மேலும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கேரள அரசுக்கு 3 கோடி நிதி வழங்குவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களோடு ராணுவ வீரர்கள் துணை நிற்பது தனக்கு ஆறுதல் அளிப்பதாக மோகன்லால் தெரிவித்துள்ளார்.
ஜமா பட விமர்சனம்
பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜமா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை இயக்கிய பார் இளவழகன் நாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி , சேத்தன் , ஸ்ரீ கிருஷ்ணா தயால் , கே.வி.என் மணிமேகலை உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜமா படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் பள்ளிக்கொண்டா பட்டு மற்றும் அதன் சுற்றுப்புர கிராமத்தில் பிரபல நாடகக் கம்பேனியாக இருந்து வருகிறது ஆலம்பனா ஜமா ( நாடகக்குழுவை ஜமா என்று அழைப்பது வழக்கம்). இந்த குழுவின் வாத்தியாராக தாங்கல் தாண்டவம் ( சேத்தன்) இருக்கிறார். எப்போதும் திரெளபதி அல்லது குந்தி வேடம் போட்டு நடிப்பவர் தான் நாயகன் கல்யாணம். கூத்தைப் பொறுத்தவரை எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதற்கேற்ற மரியாதையைக் கொடுப்பவர் கல்யாணம். தொடர்ச்சியாக பெண் வேடமிட்டு நடிப்பதாலேயே கல்யாணத்தின் பேச்சும் , குணங்களும் , உடல்மொழியும் பெண்களைப் போல் பிரதிபலிக்கின்றன. ஆண்கள் அவனை எப்போதும் நக்கல் அடித்துக் கொண்டே இருப்பதால் பெண்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறான் கல்யாணம்.
கல்யாணத்தின் இந்த குணத்தால் அவனுக்கு யாரும் பெண் தர மறுத்துவிடுகிறார்கள். அடுத்த முறை அர்ஜூனன் வேடம் போட்டு நடித்தால் தான் திருமணம் ஆகும் என்று கல்யாணத்தின் அம்மா ஒருபக்கம் அவனை வற்புறுத்துகிறார். இன்னொரு பக்கம் தாண்டவத்தின் மகள் ஜனா ( அம்மு அபிராமி) கல்யாணத்தை காதலித்து வருகிறார். கல்யாணத்தைப் பொறுத்தவரை அவனுக்கு இருப்பது ஒரே ஆசைதான். தனது தந்தை தொடங்கிவைத்து அவர் கையால் பறிக்கப்பட்ட இந்த ஜமாவிற்கு தான் வாத்தியாராக வேண்டும். அது ஒன்று மட்டுமே அவன் ஆசை. கல்யாணம் இந்த ஜமாவிற்கு வாத்தியாராக ஆனாரா? அர்ஜூணனாக அரிதாரம் பூசினாரா என்பதே ஜமா படத்தின் கதை.
முழு விமர்சனத்தை படிக்க : Jama Movie Review: ஜமா படம் ஜமாய்த்ததா இல்லையா? எப்படி இருக்கு? என்ன கரு? - முழு விமர்சனம் இதோ!