ஜமா திரைப்பட விமர்சனம்
பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜமா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை இயக்கிய பார் இளவழகன் நாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி , சேத்தன் , ஸ்ரீ கிருஷ்ணா தயால் , கே.வி.என் மணிமேகலை உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜமா படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ஜமா கதை
திருவண்ணாமலையில் பள்ளிக்கொண்டா பட்டு மற்றும் அதன் சுற்றுப்புர கிராமத்தில் பிரபல நாடகக் கம்பேனியாக இருந்து வருகிறது ஆலம்பனா ஜமா ( நாடகக்குழுவை ஜமா என்று அழைப்பது வழக்கம்). இந்த குழுவின் வாத்தியாராக தாங்கல் தாண்டவம் ( சேத்தன்) இருக்கிறார். எப்போதும் திரெளபதி அல்லது குந்தி வேடம் போட்டு நடிப்பவர் தான் நாயகன் கல்யாணம். கூத்தைப் பொறுத்தவரை எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதற்கேற்ற மரியாதையைக் கொடுப்பவர் கல்யாணம். தொடர்ச்சியாக பெண் வேடமிட்டு நடிப்பதாலேயே கல்யாணத்தின் பேச்சும் , குணங்களும் , உடல்மொழியும் பெண்களைப் போல் பிரதிபலிக்கின்றன. ஆண்கள் அவனை எப்போதும் நக்கல் அடித்துக் கொண்டே இருப்பதால் பெண்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறான் கல்யாணம்.
கல்யாணத்தின் இந்த குணத்தால் அவனுக்கு யாரும் பெண் தர மறுத்துவிடுகிறார்கள். அடுத்த முறை அர்ஜூனன் வேடம் போட்டு நடித்தால் தான் திருமணம் ஆகும் என்று கல்யாணத்தின் அம்மா ஒருபக்கம் அவனை வற்புறுத்துகிறார். இன்னொரு பக்கம் தாண்டவத்தின் மகள் ஜனா ( அம்மு அபிராமி) கல்யாணத்தை காதலித்து வருகிறார். கல்யாணத்தைப் பொறுத்தவரை அவனுக்கு இருப்பது ஒரே ஆசைதான். தனது தந்தை தொடங்கிவைத்து அவர் கையால் பறிக்கப்பட்ட இந்த ஜமாவிற்கு தான் வாத்தியாராக வேண்டும். அது ஒன்று மட்டுமே அவன் ஆசை. கல்யாணம் இந்த ஜமாவிற்கு வாத்தியாராக ஆனாரா? அர்ஜூணனாக அரிதாரம் பூசினாரா என்பதே ஜமா படத்தின் கதை.
ஒரு சில கிராமங்களைத் தவிர தெருக்கூத்து என்பது இன்று இல்லாமல் ஆகிவிட்டது. அதற்கான ரசிகர் பட்டாளமும் குறைவே. இப்படியான சூழலில் தெருக்கூத்தைப் பற்றியும் அதில் நடிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையை படமாக்குவதும் மிகவும் சவாலான ஒரு வேலை என்றே சொல்லலாம். அந்த சவாலை இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டிருக்கிறார். துரோகம் , ஈகோ , குரு சிஷ்யன் மோதல் போன்ற கிளாசிக் எமோஷன்கள் படத்தில் சிறப்பாக பொறுந்தியிருக்கின்றன. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி.
இயல்பான நகைச்சுவை , மிகப்படுத்தப் படாத காட்சிகள் கதை நிகழ்வும் உலகத்தை மிக இயல்பாக கட்டமைத்திருக்கிறார்கள். தெருக்கூத்தை பார்வையாளர்களிடம் இருந்து பச்சாதாபத்தை எதிர்பார்க்கும் ஒரு கருவியாக இல்லாமல் தேவையான இடங்களில் பயன்படுத்தி அதன் வழியாக முக்கியமான உணர்வுகளை கடத்திய விதம் சிறப்பு. எதார்த்த உலகில் வஞ்சம் , பொறாமை பல ஏற்றத்தாழ்வுகளை பின்பற்றும் பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் தெருக்கூத்து. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் மதிக்கும் கலைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதே இப்படம் வன்முரையற்ற ஒரு படமாக இப்படம் இருப்பதற்கு முக்கிய காரணம்.
நடிகர்கள்
ஜமா படத்தை இயக்கி நடித்துள்ள பாரி இளவழகன் கல்யாணம் கதாபாத்திரத்தில் ஒரு தேர்ந்த் நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். கூத்தில் பெண்ணாக நடிப்பதையும் நடிப்பவர்களையும் இழிவாக பார்க்கும் வழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. தொடர்ச்சியாக பெண் வேடத்தை ஏற்று நடிக்கும் கல்யாணம் நிஜ வாழ்க்கையில் மற்ற ஆண்களைவிட சிறந்தவனாக தெரிகிறார். இந்த கதாபாத்திரத்தை அமைத்த விதமும் அதில் பாரி நடித்த விதமும் பாராட்டிற்குறியவை
தாங்கல் தாண்டவம் வாத்தியாருக்குப் பின் ஒரு நடிகர் இருப்பதை ஒரு கனம்கூட நம் நினைவுக்கு வருவதில்லை. அப்படியான ஒரு நடிப்பை சேத்தன் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். துணிச்சலாக எந்த யாருக்கும் தலை வணங்காத ஒரு பெண்ணாக அம்மு அபிராமி மிரட்டியிருக்கிறார். கல்யாணத்தின் அம்மாவாக வரும் கேவிஎன் மணிமேகலையை நாம் நிறைய படங்களில் பார்த்திருப்போம் என்றாலும் இப்படம் அவரது நடிப்பிற்கு நல்ல வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
இளையராஜா இசை
தெருக்கூத்தை மையப் படுத்திய படம் என்பதால் இளையராஜா இப்படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் நாடகத் தன்மை ஓங்கிய விதத்தில் உருவாக்கியிருக்கிறார். கல்யாணத்தின் அப்பா முதல் முதலாக அர்ஜூணன் கிரீடம் அணியும் போது அங்கு இளையராஜா கம்பீரமான ஒரு இசையாக இல்லாமல் ஒரு சிறுவனின் கனவு நிறைவேறு துள்ளலை சேர்த்திருப்பார். இந்த மாதிரியான ஒரு சில தருணங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியாக இருந்தன. ஒரு சில இடங்களில் பின்னணி இசை மிகையாக இருந்ததையும் சொல்லவேண்டும் தான்.
திரைக்கதையில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பல சமயங்களில் கதை ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் இருந்தது தொய்வை ஏற்படுத்தியது ஒரு மைனஸ். பல இடங்களில் சினிமேட்டிக் தனமாக நாயகனுக்கோ வில்லனுக்கோ சின்ன சின்ன ட்விஸ்ட் வைத்து படத்தை சுவாரஸ்யப் படுத்தும் வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் அதை தேர்வு செய்யாமல் தனது கதைக்கு நேர்மையாக இருந்தது ஜமா படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ்