'அந்தகன்' முதல் நாள் வசூல் :
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் பல ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் நேற்று வெளியானது 'அந்தகன்' திரைப்படம். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்க சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலையும் ஈட்டியுள்ளது. முதல் நாளில் இந்தியளவில் 65 லட்சம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.ஜே. சித்ரா மரண வழக்கு :
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை வி.ஜே. சித்ரா கடந்த 2020ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவர் ஹேம்நாத் மீது அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
'கங்குவா' டிரைலர் :
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் , உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
முஃபாஸா : தி லயன் கிங் டிரைலர் :
1994ம் ஆண்டு வால்ட் டிஸ்னி வெளியிட்ட மிகவும் பிரபலமான அனிமேஷன் படம் ’தி லயன் கிங்’. உலகம் முழுவதும் பிரபலமாகி கவனமீர்த்த இந்தப் படத்தை 2019-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை நவீன தொழில்நுட்பங்களுடன் வெளியிட்டது வால்ட் டிஸ்னி. தற்போது தி லயன் கிங் படத்தின் முந்தைய பாகமாக உருவாகி இருக்கும் படம் முஃபாஸா : தி லயன் கிங். சிம்பாவின் தந்தையான முஃபாஸா காட்டிற்கு ராஜாவான கதை, இளமையில் எப்படி இருந்தார் என்பதை காட்டும் படம். மூன் லைட் , இஃப் பீயல் ஸ்ட்ரீட் குட் டாக் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரி ஜென்கின்ஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
'மார்ட்டின்' டிரைலர்:
கன்னடத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏபி அர்ஜூன் இயக்கத்தில் துருவ் சார்ஜா லெப்டினன்ட் பிரிகேடியராக நடித்துள்ள திரைப்படம் 'மார்ட்டின்'. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.