3 மாதங்களில் ரூ.100 கோடி வசூலித்த 4 மலையாள படங்கள்.. தடுமாறுகிறதா தமிழ் சினிமா?


மாற்று சினிமாக்கள் தந்து கண்டெண்ட்ரீதியாக கோலோச்சி வந்த மலையாளம் சினிமா இந்த ஆண்டு தொடங்கி 4 மாதங்களில் வசூலிலும் மாஸ் காண்பித்து வருவது பேசுபொருளாகி உள்ளது. மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடு ஜீவிதம், சமீபத்தில் வெளியான ஆவேஷம் ஆகிய படங்கள் ரூ.100 கொடி பட்ஜெட்டைத் தாண்டியுள்ளன. அதே சமயம் இந்த ஆண்டு தொடங்கி தமிழில் வெளியான ஒரு படம் கூட 100 கோடி பட்ஜெட்டை தாண்டாதது தமிழ் சினிமா வட்டாரத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


"ஒரு வடக்கன் கூட நம்ம ஊர்ல இருக்கக்கூடாது” - சர்ச்சையை கிளப்பிய டீசர்!


பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாக உள்ள வடக்கன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. இவர் இயக்குநராக அறிமுகமாகும் வடக்கன் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள “வடக்கன்களை அடிச்சி பத்தணும், ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்கக்கூடாது” என்பன போன்ற வசனங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!


சென்ற 2023ஆம் ஐபிஎல் போட்டி ஃபேர்ப்ளே செயலில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக எழும்பிய வழக்கில் பிரபல நடிகை தமன்னாவை நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை கடந்த ஆண்டு பெற்ற வியாகாம் நிறுவனம், தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் அளித்திருந்தது. இந்நிலையில்,  ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய நடிகை தமன்னாவுக்கு இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?


பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி தன் காதலர் சாந்தனு ஹசாரிகாவை பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹஸாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததுடன், இருவரும் ஒரே வீட்டிலும் வசித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ருதி சாந்தனுவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளதுடன், அவருடனான புகைப்படங்களை நீக்கவும் செய்துள்ளார்.


"மோலிவுட்டின் பணக்கார தயாரிப்பாளர் நஸ்ரியா" கணவன் பகத் ஃபாசில் பாராட்டு


குழந்தை நட்சத்திரம், பாடகி, ஹீரோயின் என வலம் வந்த நடிகை நஸ்ரியா சமீபத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தன் கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து படங்கள் தயாரித்து வரும் நஸ்ரியா, சமீபத்தில் தயாரித்த ப்ரேமலு, ஆவேஷம் ஆகிய படங்கள் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளன. இந்நிலையில் மலையாள சினிமாவின் பணக்காரத் தயாரிப்பாளர் என நஸ்ரியாவை அவரது கணவரும் நடிகருமான ஃபஹத் பாராட்டியுள்ளார்.