நஸ்ரியா ஃபகத் ஃபாசில் ஜோடி


நஸ்ரியாவுடன் தனக்கு திருமணம் ஆக இருந்தபோது, அதை அறிவித்த  நடிகர் பகத் ஃபாசில் தனது சமூக வலைதளப்  பக்கத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தார் “ என்னை திருமணம் செய்துகொள்ள இந்த பெண் முடிவு செய்திருப்பது தான் அவள் வாழ்க்கை எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்”. இருவருக்கும் திருமணம் ஆனபோது நஸ்ரியாவின் வயது 19 பகத் ஃபாசிலின் வயது 31 . இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன ஆனால் அதை இருவரும் பெரிதாக பொருட்படுத்தாமல் தங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். 


கணவன் மனைவியாக 10 ஆண்டுகள்


இன்று மலையாள சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் படக்கூடிய தம்பதியாக நஸ்ரியா மற்றும் ஃபகத் இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை தவிர்த்து இருவரும் சேர்ந்து பகத் ஃபாசில் & ஃப்ரண்ட்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்கள். பல்வேறு அறிமுக இயக்குநர்கள் , நடிகர்களை தங்கள் தயாரிப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஐயோபிண்டே புஸ்தகம் , வரதன் , கும்பலங்கி நைட்ஸ் . சி.யு, சூன் , ஜோஜி  உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்கள். இந்த ஆண்டு பகத் ஃபாசில் தயாரிப்பில் பிரேமலு மற்றும் ஆவேஷம் ஆகிய இரு படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளன. பிரேமலு படம் 150 கோடிகள் வசூல் செய்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது, தற்போது பகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேஷம் படமும் 100 கோடி வசூலை எடுத்துள்ளது.


பணக்கார தயாரிப்பாளர் நஸ்ரியா


நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பகத் ஃபாசில் தயாரிப்பாளராக தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்  “ நான் ஒரு நடிகனாக இருப்பதைக் காட்டிலும் ஒரு தயாரிப்பாளராக இருப்பதை விரும்புகிறேன். ஒரு நடிகனாக இன்று நான் கேமரா எங்கிருக்கிறது , என்ன லென்ஸ் என்று எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு பொறுப்பாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. மம்மூட்டியோ மோகன்லாலோ கேமரா எங்கிருக்கிறது என்று கேட்டு நடித்ததை நான் பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு தயாரிப்பாளராக என்னுடைய இயக்குநருக்கு படக்குழுவினருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பதை நான் விரும்புகிறேன். “ என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர் “ சினிமாவைப் பற்றி பேசுவதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் சினிமாவைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது . சினிமாவிற்கு பதிலாக என் மனைவியைப் பற்றி என்னால் பேசிக் கொண்டே கூட இருக்க முடியும் . இப்போதைய நிலைப்படி அவர் ஒரு பணக்கார தயாரிப்பாளர்” என்று கூறியுள்ளார்.